சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் அருகில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரில் மகாத்மா காந்தி பெயரை நீக்கிய மத்திய பாஜக அரசைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையில் இண்டியா கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பட்டத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதன் பின்னர் செய்தியாளர்களின் செல்வப்பெருந்தகை பதிலளித்தார். அப்போது, இந்தியாவில் மனிதர்கள் உள்ளவரை மகாத்மா காந்தி பெயரை அழிக்க முடியாது. காந்தியை படு கொலை செய்த பிறகும் இன்னும் அவர்களது வெறி அடங்கவில்லை. இந்தியாவில் எத்தனையோ மக்கள் இந்த திட்டத்தில் பயன் பெற்றனர்.

புரட்சிகரமான இந்தத் திட்டத்தை மோடி, அமித் ஷா மற்றும் RSS -காரர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பாஜக ஆளாத மாநிலங்களில் நிதிச் சுமையை ஏற்படுத்த வேண்டும். பாஜக ஆளும் மாநிலங்களில் கூடுதலாக நிதி கொடுக்க வேண்டும் என பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. எனவே, முதலமைச்சர் தலைமையில் அனைத்து கிராமங்களிலும், மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்ட பயனாளிகளுடன் அணி திரண்டு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.