திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம் சித்தையன் கோட்டை பேரூராட்சி, பழைய பள்ளிவாசல் தர்காவில் மிகவும் பிரசித்தி பெற்ற முகைதீன் ஆண்டவர் ஜெய்லானி சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு இன்று கந்தூரி என்னும் அன்னதான விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் கடும் வெப்பத்தையும் பொருட்படுத்தாது வரிசையில் இன்று அமைதி காத்து இந்த அன்னதானத்தை பெற வரிசையில் நின்றிருந்தனர். இதில் 1000 கிலோ அரிசி மற்றும் 300கிலோ காய்கறிகள் வைத்து சமைத்த உணவை பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.

இந்நிகழ்வில் முன்னதாக கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவானது பள்ளிவாசல் இமாம் மற்றும் முத்தவள்ளிகள் தலைமையில் ஃபாத்தியா ஓதப்பட்டு இந்த அன்னதான விழாவானது நடைபெற்றது. இந்த விழாவில் சித்தையன் கோட்டை, அழகர் நாயக்கன்பட்டி, புதுப்பட்டி, சேடப்பட்டி, ஆத்தூர், திண்டுக்கல், மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த பாத்திரங்களில் நெய் சாதங்கள் மற்றும் தால்சாக்களை வாங்கிச் சென்றனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சித்தையன் கோட்டை வடக்கு பள்ளிவாசல் ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் செய்து இருந்தனர்.