அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை குழு மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அன்புமணிக்கு ராமதாஸ் கெடு விதித்துள்ளார். பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே பனிப்போர் நிலவி வரும் நிலையில் ராமதாஸ், அன்புமணி மோதல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. அன்புமணி தன் ஆதரவாளர்களுடன் பொதுக்குழு, ஆர்ப்பாட்டம், சுற்றுப்பயணம் என்று பயணித்து கொண்டு இருக்கிறார். அன்புமணி நடத்திய பொதுக்குழுவில் அன்புமணியின் பாமக தலைவர் பதவி நீட்டிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமதாஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்திற்கே புகார் அளிக்கப்பட்ட நிலையில், நேற்று முன் தினம் ராமதாஸ் தலைமையில் விழுப்புரத்தில் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் அன்புமணிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டு 16 குற்றச்சாட்டுகள் பகிரங்கமாக முன் வைக்கப்பட்டன. முக்கியமாக பாமக நிறுவனர் மற்றும் தலைவர் பதவியில் ராமதாஸ் தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் தலைமையில் அன்புமணிக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை குழுவின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் அன்புமணி மீது எடுக்கவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுகுறித்து செய்தியாளர்களின் கோக்கு ராமதாஸ் பதிலளித்தார். அப்போது, “பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு அன்புமணி மீது16 குற்றச்சாட்டுகளுக்கு பொதுக்குழுவில் அறிவித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அப்போது கட்சி விதிகள் 23-படி ஒவ்வொரு குற்றச்சாட்டையும் விவரித்தார்கள். அதன் அறிக்கையை வெளியிடவும் செய்துள்ளனர். கட்சி விதி 19 -இன் படி, அமைப்பு செயலாளர் மூலம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.” என ராமதாஸ் தெரிவித்தார்.
மேலும் பாமக எம்எல்ஏ அருள் செய்தியாளர்களின் பதிலளித்தார். அப்போது, ” ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த ஒழுங்கு நடவடிக்கை குழு 9 உறுப்பினர்கள்,. தைலாபுரத்தில் கூடினோம். கடந்த 17 -ந் தேதி விழுப்புரம் சங்கமித்ரா மண்டபத்தில் மாநில சிறப்பு பொதுக்குழு நடைபெற்றது. அதில் செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது கட்சி விரோத நடவடிக்கைக்காக கட்சி தலைமைக்கு வந்த 16 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அவை கட்சி பொதுக்குழுவில் முன் வைக்கப்பட்டது. பிறகு அது ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது. அவற்றை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்து, அன்புமணியிடம் உரிய விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்குண்டான விளக்கம் மற்றும் ஆவணங்களை அன்புமணி வருகிற 31.8.2025 தேதிக்குள் நேரிலோ, கடிதம் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.” என பாமக எம்எல்ஏ அருள் தெரிவித்தார்.