நோயாளியை அழைத்து வருவதற்காக சென்ற 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரை வழிமறித்து அவமதித்து. அவரை மிரட்டும் வகையில் பேசிய எடப்பாடி பழனிசாமி பகிரங்க மன்னிப்பு கேட்சு வேண்டும் என தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற முழக்கத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். அந்த வகையில், வேலூர் மாவட்டம், அணைக்கட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று மக்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது, அணைக்கட்டு பேருந்து நிலையம் அருகே கூடியிருந்த மக்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டு இருந்தபோது, ”இந்த அணைக்கட்டு தொகுதி அதிமுகவின் கோட்டை. நான் தொடர்ந்து பல கூட்டங்களில் கவனித்து வருகிறேன். கூட்டத்துக்கு நடுவில் வேண்டுமென்றே ஆள் இல்லாத ஆம்புலன்ஸை அனுப்பி இடையூறு செய்யும் கேவலமான செயலை இந்த அரசாங்கம் செய்து வருகிறது. எத்தனை ஆம்புலன்ஸ் விட்டாலும் எதுவும் செய்ய முடியாது. தில்லு திராணி இருந்தால் அரசியல் ரீதியாக எதிர்க்க வேண்டும். மக்கள் கூட்டத்துக்கு இடையில் இப்படி வந்தால் மக்களுக்கு ஏதாவது ஆபத்து வந்தால் என்ன செய்வது.

ஆம்புலன்ஸ்ல நோயாளி யாருமே இல்லாமல், வெறுமனே போகிறது. இதை 30 கூட்டத்தில் பார்த்து விட்டேன். எதிர்க்கட்சியின் கூட்டம் நடக்கிறது என்றால் காவல்துறை பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இது குறித்து நாளை காவல் துறையிடம் புகார் கொடுப்போம். மக்களுக்கு தீமை செய்யும் ஆட்சியாகத்தான் இருக்குது திமுக ஆட்சி. அதிமுக ஆட்சியின் திட்டங்களை எல்லாம் நிறுத்தியதுதான் திமுக சாதனை, என எடப்பாடி பழனிசாமி பேசி இருந்தார்.
இதனிடையே, மக்கள் மத்தியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு எச்சரிக்கை விடுத்த எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக விளக்கமளித்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர், பள்ளிக்கொண்டாவில் வேலை பார்க்கிறேன். பெண் நோயாளி ஒருவரை அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதால், அணைக்கட்டு சென்ற போது அதிமுகவினரிடம் கூட்டம் முடிந்து விட்டதா என கேட்டேன். கூட்டம் முடிந்து விட்டது என கூறியதால் அவ்வழியாக சென்றேன். அங்கிருந்தவர்கள் என்னை தாக்கி, வாகனத்தை சேதப்படுத்தினர்.

மேலும் தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் விடுத்த அறிக்கையில், நேற்று இரவு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு மருத்துவமனையில் இருந்து நோயாளியை அழைத்து வருவதற்காக சென்ற 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரை வழிமறித்து அவமதித்து. அவரை மிரட்டும் வகையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எங்கள் சங்கத்தின சார்பில் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கிறோம். நேரம் காலம் பார்க்காமல் அவசரத்திற்கு அழைத்த உடனே ஓடிச்சென்று உயிர்களை காப்பது தான் எங்களின் பணி. அப்படி நாங்கள் செய்யும் பணியை மதித்து எங்களை பாராட்டாவிடினும் இப்படி அவமதித்து மிரட்டுவதை எங்களால் ஏற்க முடியாது.
இப்படி உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமான தங்களின் பேச்சிற்கு பகிரங்க மன்னிப்பு கேட்சு வேண்டும் என வலியுறுத்துகிறோம். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மன்னிப்பு கேட்கத்தவறும் பட்சத்தில் அவருக்கு எதிராக தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம் என்பதையும் தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.