தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியில் உள்ள 4 MLA-க்களை ராஜினாமா செய்ய வைத்து உடனடியாக தவெகவில் இணைத்து கொண்டது ஜனநாயக படுகொலை. வன்மையாக கண்டிக்கிறோம். முதலமைச்சர் விஜய் மக்கள் விருப்பத்திற்கு எதிராக தவெகவில் இணைத்திருப்பது ஒரு மோசடி. இதை தமிழ்நாடு மக்கள் விரும்பவில்லை என பாமக தலைவர் அன்புமணி கடுமையாக விமர்சித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களைப் பெற்று நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தவெக ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை இல்லாத நிலையிலும் மே 6-ந் தேதி தமிழக பொறுப்பு ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க ஜோசப் விஜய் உரிமை கோரினார். ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என்று ஆளுநர் தெரிவித்தார்.
இந்நிலையில் மீண்டும் மே 7-ந் தேதி இரண்டாவது முறையாக ஆளுநரை சந்தித்து ஜோசப் விஜய் பேசி இருந்தார். மேலும் மே 10-ஆம் தேதிக்குள் புதிய அரசு அமையாவிட்டால், தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்று சண்முகம் எச்சரித்துள்ளார்.

தவெகவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்க கைகோர்த்துள்ள நிலையில், சிபிஐஎம், சிபிஐ, முஸ்லீம் லீக் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் தமிழக வெற்றிக் கழகம் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்நிலையில், வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். நேரடியாக அங்கு சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் நலன் கருதி நான் ஒரு முடிவை எடுத்துள்ளேன். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும், பொறுமையாக இருங்கள், நல்லதே நடக்கும் என பேசியதாக தகவல் வெளியானது.
இதற்கிடையே, ஒரு தகவல் தீவிரமாகப் பரவியது. எதிரெதிர் துருவங்களாக அரசியல் களத்தில் செயல்பட்டு வரும் திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க உள்ளதாக தகவல் பரவியது. இந்நிலையில் தான் திமுக கூட்டணியில் இருக்கும் இடதுசாரிகள், வெளியில் இருந்து தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவிக்க, விசிக, சிபிஐ, சிபிஐஎம், ஐ.யூ.எம்.எல் ஆகிய கட்சிகள், ஜோசப் விஜய் ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ளன. இதன் மூலம் 120 எம்.எல்.ஏக்கள் ஆதரவு என்ற எண்ணிக்கையை எட்டியுள்ள தவெக, ஆட்சியமைத்தது
அதனைத் தொடர்ந்து, நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவில் இருந்து 25 எம்எல்ஏக்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர். விஜய்க்கு ஆதரவு அளித்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு விஜய் அமைச்சரவையில் இடம் கொடுப்பார் என தகவல் வெளியானது. ஆனால் விஜய் அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கவில்லை.
இந்நிலையில் தான் விஜய்க்கு ஆதரவு அளித்த எம்எல்ஏக்களில் 5 பேர் எடப்பாடியை சந்தித்து மீண்டும் கட்சியில் இணைந்தனர். மேலும் இன்று தலைமை செயலகத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை சந்தித்த அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா செய்தனர். மதுராந்தகரம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்தியபாமா ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.
மூன்று பேருமே வேலுமணி – சிவி சண்முகம் தரப்பில் இருந்தவர்கள். எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்த மூவரும் தவெகவில் இணைந்துள்ளனர். இது அதிமுக தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தேர்தல் நடந்து முடிந்து 1 மாதம் தான் ஆகியுள்ளது. ரிசல்ட் வந்து 20 நாள் தான் ஆகிறது. எம்எல்ஏக்களாக பதவியேற்று 12 நாட்கள் தான் ஆகின்றன. அதற்குள், அதிமுகவின் 3 எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு கட்சி தாவியுள்ளனர். இவர்களின் தொகுதிகளில் இடைத்தேர்தல் வரவுள்ளது.
இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த செயல்பாட்டைக் கண்டித்துள்ளன. புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பாமக தலைவர் அன்புமணி பேசுகையில் ,” நல்லது செய்தால் வரவேற்போம், தவறு நடந்தால் எதிர்ப்போம் இது தான் எங்கள் நிலைப்பாடு. ஸ்டாலின் கொளத்தூரில் தோல்வி அடைந்தது சேகர் பாபுவிடம் தான் கேட்க வேண்டும். திமுக அரசு சரியாக செயல்படாததால் தான் திமுக தோல்வி அடைந்தது. விஜய்க்கு மக்கள் வாக்களித்தார்கள். உண்மையான தகவலை ஸ்டாலினுக்கு யாருக்கும் சொல்லவில்லை.. அவர் கூட உள்ள அமைச்சர்களே அதை அவரிடம் தெரிவிக்கவில்லை.
டிஜிபி தலைமையில் போதை தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். 15 நாட்களில் ஒரு மாவட்டத்திற்கு அவகாசம் கொடுங்கள். அதற்குள் சரி செய்யவில்லை என்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜயிடம் கூறியுள்ளோம். அதிமுகவில் நடப்பது உட்கட்சி விவகாரம் அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. அதிமுக உட்கட்சி பிரச்சினை அதை அவர்கள் பார்த்து கொள்வார்கள். 50-60 ஆண்டுகளாக இருக்கும் கட்சி உட்கட்சி பிரச்சினையை சரி செய்வார்கள்.
அதே நேரத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்த விவகாரத்தில், ராஜினாமா ஜனநாயக படுகொலை. தமிழ்நாட்டில் தேவை இல்லாத இடைதேர்தல். இது சரியல்ல. இடைதேர்தல் வந்தால் தற்போது ராஜினாமா செய்த நான்கு வேட்பாளர்களும் படும் தோல்வி அடைவார்கள். தேவைப்பட்டால் எதிர்கட்சிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து ஆளும் கட்சி வேட்பாளருக்கு எதிராக ஒரு பொது வேட்பாளரை அறிவிப்போம். இந்த சூழ்நிலைக்கு எங்களை தள்ள வேண்டாம்.” என அன்புமணி தெரிவித்தார்.