எனது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. நான் வாய்திறந்தால் எல்லாவற்றையும் பேசிவிடுவேன். அமித் ஷா வாக்குக்காக கட்டுப்பட்டு இருக்கிறேன் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, அதிமுகவில் சிலர் என்னை திட்டிக்கொண்டு இருக்கிறார்கள். எனது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. நான் வாய்திறந்தால் எல்லாவற்றையும் பேசிவிடுவேன். அமித் ஷா வாக்குக்காக கட்டுப்பட்டு இருக்கிறேன். லட்சுமண ரேகையை தாண்டக்கூடாது. எல்லாம் தானாக நடக்கிறது. அப்படி இருக்கும் போது எல்லாவற்றிற்கும் நான் தான் காரணம் என பேசுகிறார்கள்.
பசும்பொன்னில் O. பன்னீர்செல்வம் , TTV. தினகரன் மற்றும் செங்கோட்டையன் ஒன்றினைந்ததற்கு நான் காரணம் இல்லை. யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது” என அண்ணாமலை தெரிவித்தார். மேலும், செங்கோட்டையனை நீங்கள் (அண்ணாமலை) சந்தித்தாக தகவல் வருகிறதே என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, ‘கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் போகலாம். காரில் போகலாம். ரயிலில் போகலாம். விமானத்தில் போகும் போது அவர் (செங்கோட்டையன்) வருகிறார்.
நான் பார்க்கிறேன். இரண்டுமுறை அவரை சந்தித்து இருக்கிறேன். இரண்டு முறையுமே விமானத்தில்தான் சந்தித்து இருக்கிறேன். வெளியே வரும் போதுதான் பேச வாய்ப்பு கிடைத்தது. பொதுவாகத்தான் பேசினோம்.. அவருடைய அரசியல் வாழ்க்கை அவருடையது. என்னுடைய அரசியல் வாழ்க்கை என்னுடையது” என அண்ணாமலை தெரிவித்தார்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழாவையொட்டி தமிழக அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், வி.கே.சசிகலா, அமமுக பொதுச் செயலாளர் TTV. தினகரன், O. பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், TTV. தினகரன், O. பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் என மூவரும் ஒரே நேரத்தில் திடீரென ஒன்றாக வந்து மரியாதை செலுத்தினர். அது போல் கூட்டாக செய்தியாளர்களையும் சந்தித்தனர். அப்போது டிடிவி தினகரன் பேசுகையில், “சசிகலா இங்கு வருவதற்காக கொஞ்சம் காலதாமதமாக கிளம்பினார். அதனால் அவரால் எங்களோடு இங்கு பங்கேற்க முடியவில்லை. ஆனால் அவர் மனதார என்றைக்கும் எங்களோடு இருப்பார் என்றார்.
இதையடுத்து TTV. தினகரன் புறப்பட்டுச் சென்ற நிலையில் O. பன்னீர்செல்வம், செங்கோட்டையன் இருவரும் சிறிதுநேரம் காத்திருந்து வி.கே. சசிகலாவை சந்தித்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் இருவரும் வி.கே. சசிகலாவிடம் பரஸ்பரம் நலம் விசாரித்தனர். பின்னர் அவர்களுடன் சசிகலா சிறிது நேரம் பேசினார். பின்னர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய வி.கே. சசிகலா தரையில் அமர்ந்து வழிபாடு செய்தார். இவர்களின் சந்திப்பு நேற்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த சந்திப்புக்கு நான் காரணம் என சிலர் பேசுவதாகவும் அது தானாக நடந்தது என அண்ணாமலை தெரிவித்தார்.