அந்த கத்தியை எடு… இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா? ஆட்சி அதிகாரம் என்பது அடக்குமுறையை ஏவுவதற்கு அல்ல என அதிமுக ஐடி விங் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. ‘ஊழலற்ற நிர்வாகம்’ மற்றும் ‘லஞ்ச ஒழிப்பு’ வாக்குறுதிகளை முன்னிறுத்தி 2026-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மை பெற்று ஆட்சி அதிகாரத்தை பிடித்தது. தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் மே 10-ந் தேதி பொறுப்பேற்றதில் இருந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சட்ட ஒழுங்கு பிரச்சனை நிகழ்ந்து வருகிறது.
இந்நிலையில், விஜய் தலைமையிலான அரசுக்கு அதிமுக தரப்பில் இருந்து கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக அதிமுக ஐடி விங் தனது எக்ஸ் பக்கத்தில், “அந்த கத்தியை எடு, இவனை வண்டியில ஏத்து..” நடுரோட்டில், ஒரு பொக்லைன் ஆப்ரேட்டரை ஆளுங்கட்சியின் நிர்வாகி ஒருவர் அராஜகமாகத் தாக்கும் காட்சி, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த நிலைக்குச் சென்றுள்ளது என்பதற்குச் சான்று.
அதிகார போதையில் மிதக்கும் இவர்களுக்கு இவ்வளவு தைரியம் எங்கிருந்து வருகிறது? தட்டிக் கேட்க வேண்டிய காவல் துறை மௌனமாக வேடிக்கை பார்ப்பது யாருக்காக? “இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா? ஆட்சி அதிகாரம் என்பது அடக்குமுறையை ஏவுவதற்கு அல்ல; சாமானியன் அச்சமின்றி வாழ்வதை உறுதிப்படுத்துவதற்கு. சட்டத்தை கையில் எடுக்கும் உங்கள் கட்சியினரின் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என அதிமுக ஐடி விங் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.