“திமுக தகவல் தொழில்நுட்ப அணியுடன் War செய்யும் அளவுக்கு, அதிமுக ஐடி விங்குக்கு தகுதி கிடையாது” என அமைச்சர் TRB. ராஜா தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் விவகாரத்தில் அதிமுக ஐடி விங் முன்னாள் நிர்வாகி பிரசாத் சிக்கிய விவகாரத்தைத் தொடர்ந்து திமுக ஐடி விங் – அதிமுக ஐடி விங் இடையே காரசாரமான கருத்து மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் அமைச்சர் டிஆர்பி ராஜா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு முழுவதிலும் இருந்து திமுகவில் உறுப்பினர்களை இணைப்பதற்கான ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தில் செயல்பட அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இதில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ செயலியை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பது குறித்தும், 2 கோடி மக்களை திமுக உறுப்பினர்களாக சேர்ப்பதை எளிதாக்குவது குறித்தும் காணொளி வாயிலாக செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
அதனைத் தொடந்து செய்தியாளர்களின் கேள்விக்கு TRB. ராஜா பதிலளித்தார். அப்போது “தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில், எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் “திராவிட மாடல்” ஆட்சியில் அனைத்தும் கிடைத்துக் கொண்டு இருக்கிறது.
நூற்றாண்டு காலம் கடந்து செல்ல இருக்கும், இந்த இயக்கத்தை திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுப்பிக்க நினைக்கிறார். அதன் விளைவாக, டீக்கடை முதல் ட்விட்டர் வரை இந்த இயக்கத்தின் பிரச்சாரம் பயணித்து இருக்கிறது.
இந்த பயணம் வழியாக தமிழ் இனத்திற்காக, தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக, தமிழ் மக்களின் எதிர்காலத்திற்காக, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ஓரணியில் திரண்டு தமிழ்நாட்டிற்காக நிற்க விரும்புகிறீர்களா என்ற கேள்வியை, இந்த உறுப்பினர் முகாமின் மூலம் மக்களிடையே சேர்க்க உள்ளோம்.
234 தொகுதிகளிலும் திமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள், 27 ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் மிக பிரம்மாண்டமாக ‘ஓரணியில் தமிழ்நாடு’ செயலி குறித்த பயிற்சி கொடுக்க இருக்கிறார்கள். உறுப்பினர் சேர்க்கை மட்டும் அல்லாமல் திமுக அரசின் திட்டங்கள் சரியான அளவில் சென்றடைந்துள்ளதா? என ஆராய்ந்து அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் இருக்கும்.
இனத்தை எதிர்த்துவரும் எதிரிகளையும், இனத்திலேயே இருந்து கொண்டு துரோகம் செய்யும் துரோகிகளையும் முறியடிக்கும் பயணத்தில் திமுக இறங்கியுள்ளது. மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படுவதை பற்றி பட்டித்தொட்டி எல்லாம் தெரிவிக்க உள்ளோம். மத்திய பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கை வெளிச்சம் போட்டு மக்களுக்கு காட்டப் போகிறோம். இந்த ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தின் தலைவராக இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூலை 1ஆம் தேதி, ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கி வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து, உறுப்பினர் சேர்க்கை முகாம் தமிழ்நாடு முழுவதும் ஜூலை 3ஆம் தேதி முதல் நடத்தப்படவுள்ளது. 2 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் இணைவார்கள் என்ற நம்பிக்கையுடன் தொடங்குகிறோம்” என TRB. ராஜா தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் அதிமுக ஐடி விங் vs திமுக ஐடி விங் இடையே சமூக வலைதளத்தில் நிலவி வரும் கருத்து மோதல் பற்றிய கேள்விக்கு அமைச்சர் TRB. ராஜா பதில் அளித்தார். அப்போது, “எங்களுடன் War செய்ய அதிமுக ஐடி விங்குக்கு தகுதி கிடையாது” என TRB. ராஜா தெரிவித்தார்.