2026 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக 4777 என்ற எண் கொண்ட பிரச்சார வாகனத்தை அரியலூர் பாஜகவின் முன்னாள் தலைவர் ஐயப்பன் நயினார் நாகேந்திரனுக்காக பிரத்யேகமாக தயார் செய்துள்ளார். தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில் தேர்தல் பணிகளை பிரதான அரசியல்கட்சிகளான திமுகவும், அதிமுகவும் அதி மும்முரமாக தொடங்கியுள்ளது.
மேலும் தமிழக அரசியல் களத்தில் திமுக மற்றும் அதிமுக இரு கட்சிகளும் அடுத்தடுத்து இருமுறை ஆட்சி அமைக்க முடியாமல் இருந்ததை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடைத்து அதிமுக அடுத்தடுத்து வென்று ஆட்சி அமைத்தார் . அதோபோல திமுக அடுத்தடுத்து வென்று ஆட்சி அமைத்ததில்லை என்ற குறையை போக்க மு.க.ஸ்டாலின், தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார். மறுபுறம், அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிச்சாமி தன் மீதான தொடர் தோல்வி விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என விரும்புகிறார்.

மேலும் விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொமதேக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் சில அமைப்புகள் 2019 தேர்தலுக்கு முன்னதாக திமுக கூட்டணி உருவான நிலையில் அதில் இருந்த கட்சிகள் தற்போது வரை தொடர்ந்து பக்கபலமாக இருக்கிறது. ஆனால், அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அமைந்திருக்கும் நிலையில், பாஜகவோடு கடந்த காலங்களில் கூட்டணி அமைத்திருந்த தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, மக்கள் முன்னேற்ற கழகம், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் சேரலாம் என கூறப்படுகிறது. மேலும் பாமகவும் அதிமுக கூட்டணிக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கியுள்ளார். மறுபுறம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி “மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில், இரண்டு பிரதான கட்சிகளுடன் 2026 தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டது.

இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக 4777 என்ற எண் கொண்ட பிரசார வாகனத்தை நயினார் நாகேந்திரனுக்காக பிரத்யேகமாக தயார் செய்துள்ளார் அரியலூர் பாஜக-வின் முன்னாள் தலைவர் ஐயப்பன். முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பயன்படுத்திய காரின் எண் இது என்பதை அறிந்தவுடன், நயினார் நாகேந்திரன் ஆர்வமாக அவரே வாகனத்தை இயக்கி திருநெல்வேலி மாநகரை வலம் வந்துள்ளார்.