மகளின் திருமணச் செலவு, மகனின் படிப்புச் செலவு என ஏதாவது ஒரு காரணத்திற்காக நடுத்தர வீட்டுக் குடும்பத்தினரின் மாத பட்ஜெட்டில் சீட்டு கட்டி பணம் சேர்ப்பது தவறாமல் இடம் பெறும் விஷயமாகும். அப்படி சிறுக சிறுக சேர்க்கும் ஒருத்தன் தீபாவளி, பொங்கல் சீட்டு. இந்த சீட்டில் சேருகிறவர்களுக்கு தீபாவளியின்போது கட்டிய பணத்துடன் பட்டாசு, பண்ட பாத்திரங்கள், இனிப்பு வகைகள் பரிசாக அளிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் புத்தாடை, இனிப்பு, பட்டாசு, வீட்டிற்குத் தேவையான புதிய பொருள்களை வாங்கி தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அப்படிகொண்டாடப்படும் தீபாவளி பண்டிகைக்கு நிறைய பணம் செலவுகள் இருக்கும் என்பதால் பொதுமக்கள் பலரும் தீபாவளி சீட்டு போடுவது வழக்கம். சிறுக சிறுக சேமித்தால் தீபாவளி பண்டிகையின்போது கணிசமான தொகை கைக்கு கிடைக்கும் அதை வைத்து ஓரளவிற்கு செலவுகளை ஈடுகட்டி கொள்ளலாம் என்று பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் சீட்டு போடுவது வழக்கம்.

பல கடைகளின் தீபாவளி ஆஃபர் செய்திகளைப் போல ஆண், பெண் என்ற பேதமின்றி தனக்கு தெரிந்தவர்கள் மூலம் புதிது புதிதாக ஒவ்வொரு ஆண்டும் பல தீபாவளி சீட்டு நடத்துபவர்கள் அறிமுகமாகி மோசடி செய்வதைக் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். அந்த வகையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பக்கிரிப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபு திருப்பாதிரிப்புலியூர் தேரடி வீதியில் பழைய தங்க நகைகள் வாங்கி விற்கும் கடை வைத்துள்ளார். தீபாவளி சீட் பண்ட் திட்டம் என்ற பெயரில் கடலூர் புதுக்குப்பம், பண்ருட்டி, விருத்தாசலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணம் வசூலித்துள்ளார்.
இதில் முதிர்வு அடைந்த 66 பேருக்கு ரூ.7.92 லட்சம், ஹேமா என்பவர் மூலம் பணம் கட்டிய 162 பேருக்கு ரூ.19.44 லட்சம், ரெட்டிச்சாவடி பூசாரிப்பாளையம் வனிதா என்பவர் மூலம் பணம் கட்டிய 42 பேருக்கு ரூ.1.80 லட்சம், வனிதாவிடம் கடனாக பெற்ற ரூ.4 லட்சம் போன்றவற்றை கொடுக்காமல் ஏமாற்றி விட்டு கடையை மூடிவிட்டு தலைமறைவானார்.
இவருக்கு உடந்தையாக அவரது மனைவி ஆயுதப்படை காவலர் கோமளாவும் பணத்தை ஏமாற்றியதாக அனிதா என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் புகார் மனு அளித்தார். அதன் பேரில், காவல்துறை வழக்குப்பதிவு செய்து பிரபுவை கடந்த ஏப்ரல் 14-ந் ம் தி கைது செய்தனர்.இந்நிலையில் பிரபுவின் மனைவி கோமளா நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கோமளா அவர்களை உடனடி பணியிடை நீக்கம் செய்து காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டார்.