அரியலூரில் பொதுப்பாதையை மீட்க போராடிய CPIM தலைவர்கள் மற்றும் மற்றும் பொதுமக்களை தாக்கினார்கள் என்று கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி என அரியலூர் மாவட்ட காவல்துறையினர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அரியலூர் வட்டம், பெரியநாகலூர் ஊராட்சிக்குட்பட்ட, காட்டுப்பிரிங்கியம் பாலக்கரை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மூன்று தலைமுறைகளாக பாலக்கரை கிராமத்திற்கு செல்வதற்காக பொதுப்பாதையை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை தனிநபர் ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்துள்ளதால் பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு செல்வதற்கு பெரிதும் சிரமப்பட்டனர். இந்த பொதுப் பாதையை மீட்டுத்தரக் கூறி, பல கட்ட போராட்டங்கள் நடத்தியதுடன், மாவட்ட அரசு அதிகாரிகளையும் சந்தித்து புகார் மனு அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த பொதுப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டதால் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், வேலைகளுக்கு செல்லும் பொதுமக்கள், முதியவர்கள் உள்ளிட்டு அனைத்துதரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், இந்த பொதுப்பாதையை மீட்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், பொதுமக்களும் இணைந்து கடந்த 03.10.2025 அன்று போராட்டம் நடத்தியுள்ளனர்.

இந்த போராட்டத்தில் தேவேந்திரன் அவரது மனைவி இந்திரா காந்தி, மகள் சகானா ஆகியோர் மற்றும் சிலர் காயமடைந்தனர். இந்த அசாதாரண சூழ்நிலையை புரிந்து கொண்ட காவல்துறையினர், மேலும் ஏதேனும் விபரீதம் நடப்பதற்குள், அவர்கள் மூவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேற்கொண்டு சட்ட ஒழுங்கு பிரச்சனை எதுவும் ஏற்படா வண்ணம் இருக்க போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் நோக்கில் காவல்துறை வாகனத்தில் ஏற்றி மண்டபத்திற்கு அழைத்துச் சென்ற பின்னர் விடுவிக்கப்பட்டார்கள்.
இந்நிலையில், பாலக்கரை பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை தனியார் ஆக்கிரமிப்பாளரிடமிருந்து உடனடியாக மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட வருவாய்த்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களையும், பொதுமக்களையும் இழிவாக பேசி, தாக்கி கைது செய்த அரியலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்தி இருந்தது.

அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் விடுத்துள்ள அறிக்கை, அரியலூர் மாவட்டம், அரியலூர் உட்கோட்டம் கயர்லாபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுப்பிரிங்கியம் கிராமத்தில் சர்வே எண்: 393-5A, 6A அதன் ஒரு பகுதியை சுமார் 40 குடும்பத்தினர்கள் பொதுப்பாதையாக பயன்படுத்தி வந்துள்ளனர். அந்த நிலத்தின் உரிமையாளரான முத்துவேல் என்பவர் இது குறித்து அரியலூர் கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் 2019 வருடம் வழக்கு தொடர்ந்ததில், தீர்ப்பு அவருக்கு சாதகமாக அமைந்தது. (வழக்கு எண் 92/2019). இதனை தொடர்ந்து முத்துவேல் அவரது மகன் தேவேந்திரன் குடும்பத்தினருடன் தனக்கு சொந்தமான அந்த இடத்தில் 03 மாதங்களுக்கு முன்பு ஆஸ்பெட்டாஸ் சீட் கொட்டகை போட்டு சுற்றி கம்பி வேலி அமைத்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த 40 குடும்பத்தினரும், தேவேந்திரன் அவர்களுக்கு சொந்தமான இடத்தில் பாதை வேண்டும் என்று கூறி பொதுப்பாதையை மீட்கும் போராட்டம் நடத்த 29.09.2025 அன்று கயர்லாபாத் காவல் நிலையத்தில் CPI (M) கட்சி சார்பில் அனுமதி கேட்கப்பட்டது. காவல்துறை சார்பில் அந்த இடம் குறித்த பிரச்சனைக்கு ஏற்கனவே அரியலூர் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி விட்டது. தீர்ப்பில் உடன்பாடு இல்லை எனில் மேல்முறையீடு செய்ய பரிந்துரை செய்தது. மேலும் போராட்டம் நடத்த அறிவிக்கப்பட்ட இடமானது மாநில நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளதால் போக்குவரத்துக்கும், மக்களுக்கும் இடையூறு ஏற்படும் என்ற காரணத்தினாலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே போராட்டம் நடத்த வேண்டும் என்ற காரணத்தினாலும் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டு 30.09.2025 அன்று அதற்கான பிரதி அவர்களிடம் வழங்கப்பட்டது.

இத்தகைய சூழ்நிலையில் 03.10.2025 அன்று காலை 11.00 மணியளவில் பாலக்கரையில் உள்ள தேவேந்திரன் அவர்களுக்கு சொந்தமான பட்டா நிலத்திற்கு CPI (M) கட்சியை சேர்ந்த அரியலூர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட விவசாய சங்க தலைவர் மணிவேல் ஆகியோருடன் ஆண்கள் மற்றும் பெண்கள் பலர் போராட்டம் நடத்தினார்கள். அந்த இடத்தில் அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் போராட்டத்திற்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்பட்டது. அரியலூர் உட்கோட்ட பொறுப்பு காவல் துணைக் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் அவர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டக்காரர்கள் அதனை ஏற்கவில்லை. இளங்கோவன் என்பவர் யார் தடுத்தாலும் பாதையை மீட்டே தீருவோம் என்று கூறி பாதுகாப்பில் இருந்த காவலர்கள் தடுக்க முயன்ற போதும் அவர்களை மீறி முன்னேறினார்.
அவரைத் தொடர்ந்து வந்த 40-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து கம்பி வேலியை பிடுங்கி எறிந்து, மண்வெட்டியால் பயிர் செய்த நிலத்தை சேதப்படுத்தி, ஆஸ்பெட்டாஸ் கொட்டகையை அடித்து உடைத்தார்கள். இதனை தடுக்க முயன்ற நிலத்தின் உரிமையாளரான தேவேந்திரன் அவரது மனைவி இந்திரா காந்தி, மகள் சகானா ஆகியோரை போராட்டக்காரர்கள் தாக்கினார்கள். இந்த அசாதாரண சூழ்நிலையை புரிந்து கொண்ட காவல்துறையினர், மேலும் ஏதேனும் விபரீதம் நடப்பதற்குள், அவர்கள் மூவரையும் மீட்டனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினர், போராட்டக்காரர்களை அங்கிருந்து கலைந்து செல்லக் கூறியும் கேட்காததால், மேற்கொண்டு சட்ட ஒழுங்கு பிரச்சனை எதுவும் ஏற்படா வண்ணம் இருக்க, போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் நோக்கில் காவல்துறை வாகனத்தில் ஏற்றி மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.பின்னர் விடுவிக்கப்பட்டார்கள்.சட்டவிரோதமாக கூடுதல் மற்றும் கலகம் ஏற்படுத்துதல், பிறர் சொத்தை சேதப்படுத்துதல், குற்றமுறு மிரட்டுதல் மற்றும் தாக்குதல் முதலிய குற்றங்களுக்காக கயர்லாபாத் காவல் நிலையத்தில் போராட்டக்காரர்கள் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் காவல்துறையினர் CPIM கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்களை தாக்கினார்கள் என்று கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.