இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 T -20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இங்கிலாந்தின் நாட்டிங்காமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் மைதானம் முதல் T -20 ஆட்டம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 7.4 ஓவர்களில் 27 பந்துகளில் 8 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இந்திய மகளிர் அணி 8.3 ஓவர்களில் 77 ரன்கள் எடுத்து இருக்கையில் 22 பந்துகளில் 3 பவுண்டரிகள் உட்பட 20 ரன்கள் எடுத்து ஷஃபாலி வர்மா ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஹர்லீன் தியோல் மற்றும் ஸ்மிருதி மந்தனாவுடன் இணைந்து இங்கிலாந்து மகளிர் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.

தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்தி வந்த ஸ்மிருதி மந்தனா 15.4 ஓவர்களில் 51 பந்துகளில் 14 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் என தனது சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் T-20 -யில் ஹர்மன்ப்ரீத்துக்கு அடுத்ததாக சதம் விளாசிய 2-வது இந்திய வீராங்கனை என்ற சாதனையைஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.
மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹர்லீன் தியோல் அரைசதத்தை பூர்த்தி செய்தார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 15.6 ஓவர்களில் 23 பந்துகளில் 7 பவுண்டரிகள் உட்பட 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ரிச்சா கோஷ் 12, ஜெமிமா 0 ரன்கள் அமஞ்ஜோத் 3, தீப்தி 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் லாரன் பெல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அர்லட் மற்றும் சோஃபி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

211 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து மகளிர் அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க 14.5 ஓவர்களில் 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழக்க இந்திய மகளிர் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் நல்லபுரெட்டி ஸ்ரீ சரணி 4 விக்கெட்டுகளையும், ராதா யாதவ் மற்றும் தீப்தி சர்மா தல 2 விக்கெட்களையும் அமன்ஜோத் கவுர் மற்றும் அருந்ததி ரெட்டி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.