நாட்டுக்காக விளையாட வேண்டும் என்றால் எத்தகைய மன உறுதி மற்றும் உத்வேகம் வேண்டும் என்பதை பந்தின் இந்த அரை சதம் ஒரு நினைவூட்டலாக பலருக்கும் இருந்திருக்கும் இந்த ஒரு இன்னிங்ஸ் காலம் முழுவதும் நிலைத்து நிற்கும். சிறப்பாக விளையாடி இருக்கிறீர்கள் பந்த் என்று சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.
ஜூன் 20-ந் தேதி முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவும், இங்கிலாந்தும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றன. இந்நிலையில் இந்தியா, இங்கிலாந்து விளையாடும் தொடருக்கு பட்டோடி கோப்பை என்ற ‘ஆண்டர்சன் சச்சின் டிராபி’ தொடர் என மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டர்சன் சச்சின் டிராபி’ தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்ற நிலையில் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் 4-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ரன்களை எடுத்திருந்தது. இந்த போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் ரிஷப் பந்த் சிறப்பாக ஆடி வந்தபோது கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தில் ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்ற ரிஷப் பந்த், பந்தை மிஸ் செய்ய அந்த பந்து நேராக ரிஷப் பண்ட் காலில் அடித்தது. அப்போதே ரிஷப் பந்த் பிசியோவை அழைத்து காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகக் காட்டினார். இதன்பின் ரிஷப் பந்த் ஷூவை கழற்றி பிசியோ பார்த்த போது, ரத்தம் வழியத் தொடங்கியது தெரிந்தது.

அதேபோல் சுண்டு விரல் அருகில் நல்ல வீக்கம் இருந்ததால், ரிஷப் பந்த் நிற்க கூட முடியாமல் தவித்தார். பின்னர் சிறிய ரக ஆம்புலன்ஸில் அழைத்து செல்லப்பட்டார். தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரிஷப் பந்த்-ற்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த ஸ்கேன் முடிவில், ரிஷப் பந்த் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது உறுதியாகி இருக்கிறது.

இதனால் 6 வாரங்கள் ரிஷப் பந்த் கட்டாயம் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனிடையே ரிஷப் பந்த் பெயின் கில்லர் எடுத்துக் கொண்டு பேட்டிங் அதிரடியாக விளையாடி 54 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். மேலும் 2-வது நாள் ஆட்டத்தைத் தொடங்கியஇந்தியா 94 ரன்கள் கூடுதலாகச் சேர்த்த இந்திய அணி 358 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது.
பந்த் களத்திற்கு வந்தவுடன் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மைதானத்தில் எழுந்து நின்று பாராட்டினர். அது மட்டும் இல்லாமல் பந்த் ரன்களை ஓட முடியாமல் பந்தை நீண்ட தூரம் அடித்து விட்டு நடந்து சென்று ரன்களை சேர்த்தார். மேலும் எளிமையான பந்துகளை பவுண்டரிக்கும் சிக்சருக்கும் அடித்து ரன்களை சேர்த்தார்.இதன் மூலம் ரிஷப் பந்த் தன்னுடைய அரைசதத்தை பூர்த்தி செய்தார். பந்த் அடித்த ஒவ்வொரு ரன்களும் இந்திய அணிக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றாலும் தோற்றாலும் இந்த மன உறுதி ரசிகர்கள் மத்தியில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

மேலும் ரிஷப் பந்த்-ன் ஆட்டம் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்த இன்னிங்ஸில் ரிஷப் பந்த் அரைசதம் விளாசியதன் மூலமாக பல்வேறு புதிய சாதனைகளைப் படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பந்த் அடிக்கும் 18-வது சதம் இதுவாகும். அதேபோல் ஒரே டெஸ்ட் தொடரில் அதிக அரைசதங்களை விளாசிய இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். இதுவரை ஒரு டெஸ்ட் தொடரில் தோனி மற்றும் ஃபரூக் இன்ஜினியர் ஆகியோர் 4 அரைசதங்கள் அடித்ததே சாதனையாக இருந்து வந்தது. தற்போது ரிஷப் பந்த் 5 முறை 50 ரன்களுக்கு மேல் விளாசி புதிய வரலாறு படைத்துள்ளார்.
அதேபோல் இங்கிலாந்து மண்ணில் ரிஷப் பந்த் அடிக்கும் 9-வது அரைசதம் இதுவாகும். இதுவரை வெளிநாட்டு விக்கெட் கீப்பர்களில் தோனி 8 அரைசதங்களை இங்கிலாந்து மண்ணில் விளாசியதே சாதனையாக இருந்தது. தோனியின் இந்த சாதனையையும் ரிஷப் பந்த் முறியடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஒரு விக்கெட் கீப்பராக இங்கிலாந்து மண்ணில் ஒரே தொடரில் அதிக ரன்களை ரிஷப் பந்த் விளாசி இருக்கிறார்.

இந்நிலையில், ரிஷப் பந்தை பண்டை பாராட்டி சமூக வலைத்தளத்தில் சச்சின் டெண்டுல்கர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் மன உறுதி என்பது வலியை தாங்கிக் கொண்டு அதை மீறி எழுவது பற்றியது. ரிஷப் பந்த் காயம் அடைந்த பிறகும் வலியை பொருட்படுத்திக் கொண்டு களத்திற்கு திரும்பி தன்னுடைய போர்க்குணத்தை காட்டி இருக்கின்றார்.

அதுவும் வலியுடன் இப்படிப்பட்ட ஒரு செயல்பாட்டை அவர் வெளிக்காட்டியது மிகவும் பாராட்டத்தக்கது. நாட்டுக்காக விளையாட வேண்டும் என்றால் எத்தகைய மன உறுதி மற்றும் உத்வேகம் வேண்டும் என்பதை பந்தின் இந்த அரை சதம் ஒரு நினைவூட்டலாக பலருக்கும் இருந்திருக்கும். இது ஒரு துணிச்சலான செயல்பாடு பந்தின் இந்த ஒரு இன்னிங்ஸ் காலம் முழுவதும் நிலைத்து நிற்கும். சிறப்பாக விளையாடி இருக்கிறீர்கள் பந்த் என்று சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.