மனைவி காவல் நிலையத்தில் வரதட்சணை புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த கணவன், மாமியார் மாமனார் உள்ளிட்டோர் பெண்ணிற்கு எறும்பு சாக்பீஸை தண்ணீரில் கலந்து கொடுத்து கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் நடவடிக்கை எடுக்க காவல்துறை தயக்கம் காட்டுவதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள அகிலாண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி முருகனுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் தனது மூத்த மகளான பாரத லட்சுமியை கடந்த ஆண்டு குளத்தூர் அருகே உள்ள கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் அய்யனாருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணத்திற்காக முருகன் தனது மகளுக்கு 10 பவுன் தங்க நகை, ரூ. 2 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் ரூ. 2 லட்சம் ரொக்க பணம், மருமகன் அய்யனாருக்கு ஒரு பவுனில் தங்க செயின் மற்றும் அரைப்பவுனில் தங்க மோதிரம் சீதனமாக அளித்துள்ளனர்
இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்த நிலையில் கூடுதலாக 10 பவுன் நகை மற்றும் 2 லட்ச ரூபாய் ரொக்கம் கேட்டு கணவர் அய்யனார் மாமியார் முனீஸ்வரி மாமனார் கணேசன் தாய்மாமா கோட்டைச்சாமி ஆகியோர் பாரத லட்சுமியை கொடுமைப்படுத்த துவங்கியுள்ளனர். இந்த வரதட்சணை கொடுமை தொடர்பாக பாரத லட்சுமி தனது குடும்பத்தினர் தெரிவிக்க, ஊர் பெரியவர்கள் சமரசம் செய்து வைத்துள்ளனர்.

ஆனால் மாமியார் முனீஸ்வரி மற்றும் மாமனார் கணேசன் ஆகியோர் பாரத லட்சுமி இடம் நீ உன் வீட்டிற்கு சென்று விடு நாங்கள் உன் கணவன் அய்யனாருக்கு கூடுதலாக நகை போட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைத்துக் கொள்கிறோம் என கூறி டார்ச்சர் செய்துள்ளனர். மேலும் அய்யனார் தனது மனைவி பாரத லட்சுமியிடம் அடிக்கடி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததால் பாரத லட்சுமி தனது கணவர் வீட்டில் இருந்து வெளியேறி தனது தாய் வீட்டில் சிறிது காலம் வசித்து வந்த நிலையில் கணவன் அய்யனாருக்கு வேறு திருமணம் செய்ய ஐய்யனார் வீட்டில் பெண் பார்க்க துவங்கியுள்ளனர்
இந்த தகவல் அறிந்த பாரத லட்சுமி மாமியார், மாமனார், கணவர் மற்றும் கணவரின் தாய் மாமா கோட்டைச்சாமி ஆகியோர் மீது கடந்த 19-ந் தேதி விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்துவதாக புகார் அளித்துள்ளார்
இதைத் தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த அய்யனார் மற்றும் அவரது தாய் தந்தை உறவினர்கள் இனிமேல் அய்யனார் தனது மனைவியுடன் ஒழுங்காக குடும்பம் நடத்துவார் இந்த புகாரில் வேறு வழக்கு எதுவும் பதிய வேண்டாம் நாங்கள் வெளியே வைத்து பேசி தீர்த்துக் கொள்கிறோம் என கூறி சென்றுள்ளனர்.

இதை நம்பி முருகன் தனது மகள் பாரத லட்சுமி கணவன் அய்யனார் மற்றும் குடும்பத்தினருடன் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் வீட்டுக்கு அழைத்துச் சென்ற அய்யனார் மற்றும் அவரது தாய், தந்தை மற்றும் தாய் மாமா ஆகியோர் கடந்த 20-ந் தேதி இரவு பாரத லட்சுமியை எங்கள் மீதா காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறாய் உன்னை என்ன செய்கிறோம் என்று பார் எனக் கூறி விஷத்தன்மையுடைய எறும்பு சாக்பீஸை தண்ணீரில் கலந்து அதை நான்கு பேரும் பாரத லட்சுமியைப் பிடித்துக் கொண்டு வலுக்கட்டாயமாக அவரது வாயில் ஊற்றி கொல்ல முயன்றுள்ளனர். இதில் நான்கு பேரிடமும் இருந்து தப்பித்த பாரத லட்சுமி வீட்டிற்கு வெளியே வந்து தனது தந்தைக்கு போன் போட்டு தகவல் தெரிவித்துள்ளார்
இதைத்தொடர்ந்து அங்கே வந்த பாரத லட்சுமியின் உறவினர்கள் உடனடியாக அவரை குளத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்து பின்னர் அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் வாகன மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில், முருகன் தனது மகள் பாரதலட்சுமியை விஷம் கலந்த தண்ணீரை கொடுத்து கொலை செய்ய முயன்ற கணவர், மாமியார், மாமனார் மற்றும் கணவரின் தாய் மாமா ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டுமென குளத்தூர் காவல் நிலையம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்
ஆனால் காவல்துறையினர் இதுவரை தனது மகள் பாரத லட்சுமியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி விஷம் கொடுத்துக் கொல்ல முயன்ற கணவர் அய்யனார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே காவல் துறையினர் நான்கு பேரையும் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.