தமிழகத்தில் மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் முகவரிகளை மறைத்த முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் அரசு, இப்போது புதிய FL-2 மதுபான உரிமங்களின் விவரங்களையும் தர மறுப்பது RTI மூலம் அம்பலமாகியுள்ளது. இதன் மூலம் முறைகேடுகளை மறைக்க அரசு திட்டமிட்டுச் சதி செய்கிறதா என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில், FL-2 மதுபான உரிம விவரங்களை தவெக அரசு மறைப்பது ஏன்? தமிழகத்தில் மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் முகவரிகளை மறைத்த முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் அரசு, இப்போது புதிய FL-2 (தனியார் கிளப்) மதுபான உரிமங்களின் விவரங்களையும் தர மறுப்பது RTI மூலம் அம்பலமாகியுள்ளது. இதன் மூலம் தலைமைச் செயலக மதுவிலக்குத் துறைக்கே இந்த அடிப்படைத் தகவல்கள் தெரியாதா அல்லது முறைகேடுகளை மறைக்க அரசு திட்டமிட்டுச் சதி செய்கிறதா என்ற வலுவான சந்தேகம் எழுகிறது.
பொழுதுபோக்குக் கிளப்புகளுக்கான FL-2 உரிமங்களைப் பெற்றுக்கொண்டு, அவை விதிகளை மீறி அனைவருக்கும் மது விற்கும் வணிகக் கூடங்களாகச் செயல்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. ஒருபுறம் 717 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டதாக விளம்பர நாடகமாடிவிட்டு, மறுபுறம் FL-2 உரிமங்களை வாரி வழங்குவது என்பது மக்களின் கண்களில் மண்ணைத் தூவி, மது வியாபாரத்தைத் தனியாரிடம் தாரைவார்க்கும் துரோகச் செயலாகும்.
தகவல் அறியும் உரிமைச் சட்ட விதிகளுக்குப் புறம்பாக, உரிய தகவல்களைத் தராமல் மாவட்ட வாரியாக அலைக்கழிக்கும் அதிகாரிகளின் இச்செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஜோசப் விஜய் அரசு மக்கள் நலனுக்கானது என்றால், 2026 ஜனவரிக்குப் பிறகு வழங்கப்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட அனைத்து FL-2 உரிமங்களின் விவரங்களையும் உடனடியாகப் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.