பெங்களூரு கர்நாடக மாநிலம் பெங்களூரு அரசு பேருந்தில் நடந்த சம்பவம் தான் இப்போது சமூக வலைத்தளங்களில் பலரின் கவனம் பெற்று வருகிறது. பெங்களூரு மெஜஸ்டிக்கில் இருந்து கே.ஏ. 57 எப் 6331 என்ற பதிவு எண் கொண்ட பெங்களூரு மாநகர போக்குவரத்து கழக பேருந்து நேற்று காலை, வழக்கம்போல் புறப்பட்டு கொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்துள்ளது.
டிக்கெட் எடுக்கும் பிஸியிலிருந்த நடத்துநர், தான் டிக்கெட் விற்ற கட்டணத்தை ஒரு பையில் போட்டு, அதனை ஓட்டுநர் சீட் பக்கத்திலுள்ள என்ஜின் மீது வைத்துவிட்டு, மற்ற பயணிகளிடம் டிக்கெட் கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு பெண், நடத்துநரின் பணப்பையை திருடி, தன்னுடைய பைக்குள் போட்டுக்கொண்டு, எதுவுமே தெரியாதது போல் நின்றிருந்தார்.
சிறிது நேரத்த்தில் பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துவிட்டு வந்த நடத்துநர், தன்னுடைய பணப்பை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அங்கிருந்த பயணிகளிடம் விசாரித்தபோது, என்ஜின் பக்கத்தில் வந்து நின்றது இவர்தான் என்று சம்பந்தப்பட்ட பெண்ணை காட்டினார்கள்.
நடத்துநரும், அந்த பெண்ணிடம், தன்னுடைய பணப்பை குறித்து விசாரித்தார். ஆனால், தனக்கு எதுவும் தெரியாது, தான் பையை எடுக்கவில்லை என்று கறாராக சொன்னார்.. ஓடும் பேருந்திலேயே அவ்வளவும் நடந்து கொண்டிருந்தது. சக பயணிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து பெண் பயணி மீதே சந்தேகம் இருப்பதாகவும் செல்லவும், அவரை பேருந்தில் இருந்து இறங்க விடாமல் தடுத்த நடத்துநர், தொடர்ந்து விசாரித்தார்.

ஆனால், எத்தனைமுறை கேட்டாலும் அந்த பெண், பணப்பையை தான் எடுக்கவில்லை என்று சொல்லி கொண்டேயிருந்ததால், வேறுவழியின்றி போக்குவரத்து பெண் காவல்துறையினரிடம் ஓட்டுநர் சம்பவத்தை சொன்னார். இதையடுத்து டிராபிக் பெண் காவலர், பேருந்தில் ஏறி, அந்த பெண் வைத்திருந்த பையை சோதனையிட்டார். அதில் நடத்துநரின் பணப்பை இருந்ததை கண்டு திடுக்கிட்டார்.
நடத்துநர் பணப்பை எப்படி உன் பைக்குள் வந்தது? என்று பெண் காவலர் கேட்டார். அதற்கு அந்த பெண், யாரோ திருடி, என்னுடைய பைக்குள் போட்டுவிட்டார்கள் என்று அடுத்த பொய்யை சொன்னார்.. அத்துடன், என்னுடைய கணவர் உடம்பு சரியில்லாமல் வீட்டில் படுத்து கிடக்கிறார், உடனே வீட்டுக்கு போகணும், என் குழந்தைகள் என்னை தேடுவார்கள். பேருந்தின் தானியங்கி கதவை திறந்து விடுங்கள் என்று திரும்ப திரும்ப கெஞ்சிக் கேட்டுக்கொண்டே இருந்தார்.
ஆனாலும், அந்த பெண்ணை, பெண் காவலர், நடத்துநர் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் சேர்ந்து ஆர். புரம் காவல் நிலையத்திற்கு தகவல் தந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அந்த பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவரிடமிருந்து நடத்துநரின் பையும் மீட்கப்பட்டது. ஆனால், பையில் இருந்த வசூல் பணம் காணாமல் போயிருந்ததை கண்டு ஒட்டுமொத்த பேரும் ஷாக் ஆனார்கள். பணம் எங்கே போனது என்று தெரியவில்லை.
ஆனால், இந்த பெண்ணுடன் வந்திருந்த 3 நபர்களின் ஆதார் விவரங்கள் மற்றும் செல்போன் நம்பர்களை காவல்துறையினர் சேகரித்துள்ளனர். இப்போது பெண்ணின் மீது பிடியாணை அல்லாத அறிக்கை (NCR) பதிவு செய்துள்ளனர். கண்டக்டர் பை மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில், பணம் திருட்டு குறித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்திற்குள் நடந்த சம்பவமும் வீடியோவாக சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.