மத்தியப் பிரதேசத்தின் மவுகஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அகாங்ஷா சதுர்வேதி மீண்டும் நீட் தேர்வை எழுதும் துணிச்சல் தனக்கு இல்லை என்றும், தன்னை மன்னித்துவிடுமாறும் உருக்கமாக கடிதம் எழுதிவைத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பான NTA -ன் கீழ் நடத்தப்படும் NEET, CUET, NET- போன்ற தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுகளின் போது கட்டுப்பாடுகள் என்ற பெயரால் மாணவிகளின் உள்ளாடைகளை கழட்டச் சொன்ன வக்கிரத்தையும், 5 நிமிட தாமதத்திற்காக கெஞ்சிய மாணவர்களுக்கு கருணை காட்டாத கொடூரத்தையும் அரங்கேற்றிய NTA தான்.
ஹரியாணாவின் ஒரே தேர்வு மையத்தில் அடுத்தடுத்த நம்பர்களில் வரும் ஆறு மாணவர்கள் இந்த 720 மதிப்பெண் பெற்றவர்கள் உற்பட ஒரே ஆண்டில் 67 மாணவர்கள் 720 மதிப்பெண்கள் முழுமையாக பெற்றதில் உள்ள ‘தில்லாலங்கடி வேலைகள்’ அம்பலமாகியுள்ளது. நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் வினாத்தாள் கசிவது, விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் குளறுபடிகள், தேர்வில் ஆள்மாறாட்டம் என ஏதாவது ஒரு முறைகேடு நடப்பது வழக்கமாகி விட்டது.
நாடு முழுவதும் சுமார் 5 ஆயிரம் தேர்வு மையங்களில் 22 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வின் வினாத்தாள்கள் கசிந்ததாக எழுந்த புகாரில், தேர்வு ரத்து செய்யப்பட்டு ஜூன் 21-ம் தேதி மறுதேர்வு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் மறுதேர்வு வினாக்களும் கசிந்திருப்பதாக தகவல் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தின் மவுகஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அகாங்ஷா சதுர்வேதி, நாக்பூரில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். கடந்த மே 3-ந் தேதி நடந்த நீட் தேர்வை சிறப்பாக எழுதி உள்ளார். இது குறித்து அவர் தனது பெற்றோரிடமும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், வினாத்தாள் கசிவு காரணமாக நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு ஜூன் 21-ந் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வுகள் முகமை கடந்த மே 12-ந் தேதி அறிவித்தது.
இந்த அறிவிப்பால் அதிர்ச்சிக்குள்ளான அகாங்ஷா சதுர்வேதி மிகுந்த விரக்தியில் இருந்து வந்துள்ளார். மே 20-ந் தேதி நாக்பூரில் உள்ள தனது வீட்டில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அன்று மதியம் குடும்பத்தினர் மதிய உணவு சாப்பிட அழைத்தபோது தனக்கு பசி இல்லை என்றும் பிறகு சாப்பிடுவதாகவும் கூறிவிட்டு தனது அறைக்குச் சென்றுள்ளார். அந்த அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதை அவரது குடும்பத்தினர் பிற்பகல் 3 மணி அளவில் பார்த்துள்ளனர். ஆனால், அப்போது தற்கொலைக்கான கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
சில நாட்களுக்குப் பிறகு மாணவியின் பாட புத்தகங்கள் மற்றும் பாடக் குறிப்புகளை பார்த்தபோது அதில் கையால் எழுதப்பட்ட ஒரு கடிதம் அவர்களுக்கு கிடைத்துள்ளது. அதில், ‘அம்மா, அப்பா… நான் படித்து மருத்துவர் ஆவேன் என்று என் மீது நம்பிக்கை வைத்திருந்தீர்கள். ஆனால், மறுதேர்வு எழுதுவதற்கான துணிவு எனக்கு இல்லை. முதல் தேர்வில் நான் நல்ல மதிப்பெண்களைப் பெற இருந்தேன்.
ஆனால், மீண்டும் நல்ல மதிப்பெண்களைப் பெறுவேன் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. என்னை மன்னியுங்கள். உங்கள் இருவரின் எல்லாவற்றையும் நான் பாழாக்கிவிட்டேன்’ என்று மாணவி அகாங்ஷா சதுர்வேதி எழுதியுள்ளார். இதையடுத்து இந்த கடிதத்தை ஜூன் 1-ந் தேதி அம்பாசாரி காவல்நிலையத்தில் மாணவியின் பெற்றோர் ஒப்படைத்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.