தூத்துக்குடியில் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச்சென்று, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த தவெக நிர்வாகிகள் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த தூத்துக்குடி தவெக மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலசுப்பிரமணியன். இவரும், இவரது நண்பர் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகியான ஜெயபால் என்பவரும், ஏரல் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறினர்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் அந்தப் பெண்ணை காரில் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், ராமநாதபுரம் அருகே ஏர்வாடி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கவைத்து, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண் ஸ்ரீவைகுண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியன், ஜெயபால் ஆகிய இருவரையும் கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.