கடலூர் மாவட்டம் நல்லூர் பகுதியை சேர்ந்த குணசேகரன் மகள் பூங்காவனம் என்பவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் சில தினங்களுக்கு முன்பு ஒருபுகார் மனு அளித்தார். அதில், தான் விவசாய கூலி வேலை செய்து வருகிறேன். எனது மகன் குபேந்திரனுக்கு 2 கிட்னி பாதிக்கப்பட்டதால், அவருக்கு டயாலிசிஸ் அல்லது கிட்னி மாற்று சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறினர்.
அதனால், தங்களது உறவினரான கடலூர் மாவட்டம் சேப்பாக்கத்தை சேர்ந்த கட்டிமுத்து என்பவர் மூலம் தனக்கு அறிமுகமான நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கும் பிரியா என்பவரோடு பழக்கம் ஏற்பட்டது. அவர், ஈரோடு மருத்துவமனையில் இதுபோன்ற அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக கூறி, பல தவணைகளில் ரூ.26 லட்சம் வரை என்னிடமிருந்து பெற்றார்.
ஆனால் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படாததால், எனது மகன் குபேந்திரன் இறந்து விட்டான். இதனால் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டபோது, ‘இவ்வளவு பணத்தை தரமுடியாது’ என்று பிரியா கூறியதோடு, ரூ.15 லட்சம் தருவதாகவும், கட்டிமுத்து ரூ.3,50,000 தருவதாகவும் பேசி ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.
அதில் கட்டிமுத்து முழு பணத்தையும் தந்துவிட்டார். ஆனால் பிரியா ரூ.4 லட்சம் மட்டுமே கொடுத்த நிலையில், மீதமுள்ள ரூ.11 லட்சத்தை தராமல் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார். எனவே தாங்கள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பூங்காவனம் அளித்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ரகுபதி மேற்பார்வையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, மோசடியில் ஈடுபட்ட நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த சூர்யபிரகாஷ் என்பவரின் மனைவி பிரியாவை நேற்று கைது செய்தனர். பின்னர் கடலூர் அழைத்து வரப்பட்ட அவர் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.