திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஓவரூர் மேட்டுத்தெருவைச் சேர்ந்த வீரராகவன் வனிதா தம்பதியினரின் இரட்டை மகள்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்று அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளனர்.
2024 -ஆம் கல்வியாண்டில் மதுரை திருப்பாலை பகுதியைச் சேர்ந்த சிம்மக்கல் பகுதியில் இருக்கக்கூடிய ஸ்ரீ சாரதா வித்யா வனம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற இரட்டையர்கள் மாய ஸ்ரீ மற்றும் மகா ஸ்ரீ ஒரே மதிப்பெண்களை(475) பெற்றுள்ளனர். அதே போல 2025 -ஆம் கல்வியாண்டில் கோயம்புத்தூர் ராமநாதபுரம் மாநகராட்சி பள்ளியில், சுந்தரராஜன் பாரதி செல்வி தம்பதியரின் இரட்டை குழந்தைகளான கவிதா மற்றும் கனிஹா ஒரே மதிப்பெண்களை(474) பெற்றுள்ளனர்.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஓவரூர் மேட்டுத்தெருவில் வசித்து வரும் வீரராகவன் சென்னையில் உள்ள ரேஷன் கடையில் பணியாற்றி வரும் நிலையில் இவரது மனைவி வனிதா ஓவரூரிலேயே குடும்பத்தையும், குழந்தைகளின் படிப்பையும் கவனித்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கார்த்திகா மற்றும் கீர்த்திகா என்ற இரட்டை மகள்கள் உள்ளனர். பிறந்த நாள் முதல் பல விஷயங்களில் ஒற்றுமையாக வளர்ந்த இவர்கள், கல்வியிலும் ஒன்றாக பயணம் செய்து வந்துள்ளனர்.
இருவரும் திருத்துறைப்பூண்டியில் உள்ள அன்னை தெரசா அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தனர். இந்நிலையில், தமிழக அரசு நேற்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டது. வழக்கம் போல் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் தேர்வு முடிவுகளை பார்த்தனர். ஓவரூரிலும் அதே பரபரப்பு நிலவியது. குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினருடன் தேர்வு முடிவை பார்த்த இரட்டை சகோதரிகள் கார்த்திகா மற்றும் கீர்த்திகாவுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவல் காத்திருந்தது.
இருவரும் தேர்வில் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், ஆச்சரியப்பட வைக்கும் வகையில் தலா 414 மதிப்பெண்கள் பெற்று இருந்தனர். இரட்டை பிறவிகளான சகோதரிகள் ஒரே பள்ளியில் படித்து, ஒரே தேர்வில் கலந்து கொண்டு, ஒரே மதிப்பெண் பெற்ற சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.