சென்னை வில்லிவாக்கம் சட்டசபை தொகுதியில் தவெகவின் ஆதவ் அர்ஜுனா போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் தான் இன்று இரவு ஆதவ் அர்ஜுனா அங்கு பிரசாரம் செய்தார். தெருமுனை கூட்டம் நடந்தபோது பெண் தொண்டர்கள் மீது உடைந்த கண்ணாடி துண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் தவெக சார்பில் ஆதவ் அர்ஜுனா களமிறங்கி உள்ளார். வில்லிவாக்கம் தொகுதியில் இன்று தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. இந்த தெருமுனை பிரசாரத்தில் வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். தவெகவின் நாஞ்சில் சம்பத் மேடையில் பேசி கொண்டு இருந்தார்.
இந்த சமயத்தில் திடீரென்று தவெக பெண் தொண்டர்கள் மீது உடைந்த கண்ணாடி துண்டுகள் வீசப்பட்டது. இதனால் பெண் தொண்டர்கள் பறிப்போயினர். இதுபற்றி அவர்கள் அங்கிருந்த பிற நிர்வாகிகளிடம் கூறினர். இதுபற்றி ஆதவ் அர்ஜுனாவிடம் புகார் சொல்லப்பட்டது. இதையடுத்து அவர் மேடையில் பேசினார்.
அப்போது, ஆதவ் அர்ஜுனா, ”எங்கள் கூட்டத்தில் பெண்மணிகள் இருக்கக்கூடிய ஏரியாவில் கண்ணாடி பாட்டில் வைத்து அடித்து கொண்டு இருக்கிறார்கள். சோடா பாட்டில் கொண்டு அடித்துள்ளார்கள். பாட்டிலை உடைத்து துளாக்கி பெண்மணியின் தோளில் அடித்து உள்ளார்கள். காவல்துறை இதை கண்டுபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் இதே இடத்தில் உட்காருவோம். கிளம்ப மாட்டோம். அராஜகம் நடந்து கொண்டிருக்கிறது? கண்ணாடி பாட்டில் வைத்து அடிப்பது தான் ஜனநாயகமா?

மு.க. ஸ்டாலின் சார் அனைத்தையும் நிப்பாட்டுங்கள். எவ்வளவு தான் அடிப்பீர்கள்? திருப்பி அடித்தால் தாங்கமாட்டீர்கள். நாங்கள் பொறுமையாக இருந்து கொண்டு இருக்கிறோம். எங்கள் பெண்கள் மீது கைவைத்தால் நாங்கள் சும்மா இருக்கமாட்டோம். கண்ணாடி பாட்டில் வீசியவர்களை இன்று இரவே கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இந்த ஆதவ் அர்ஜுனா இங்கே உட்கார்ந்து கொண்டு இருப்பார்” என பேசினார்.
இந்நிலையில், வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா நடத்திய பொதுக்கூட்டத்தில் மதுபாட்டில் விழுந்த விவகாரம் தொடர்பாக இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகே உள்ள S.J.S. தங்கும் விடுதியில் மதுபோதையில் இருந்த ரித்திக் மற்றும் அப்புகுட்டி ஆகியோர் சண்டையிட்டுக் கொண்டதாகவும், அப்போது அவர்களுக்குள் மாறி மாறி மதுபாட்டில் வீசிகொண்ட போது தவறுதலாக பொதுக்கூட்டத்தில் மதுபாட்டில் விழுந்ததாகவும் காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.