சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த 7-ஆம் வகுப்பு மாணவி, இம்மாதம் 19-ஆம் தேதி வளசரவாக்கத்தில் இருந்து அசோக் நகர் செல்லும் தடம் எண் ‘S 20’ சிற்றுந்தில் பயணித்தார். அப்போது, நடந்துநர் அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை வளசரவாக்கம் மகளிர் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், நடத்துநரை கைது செய்யவில்லை எனக்கூறி மாணவியின் பெற்றோருடன் இணைந்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், 20-ஆம் தேதி, வளசரவாக்கம் காவல் நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து காவல்நிலையத்தில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்ட நிலையில், நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விரைவில் நடத்துநரை கைது செய்வதாக, காவல்துறை உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதன் எதிரொலியாக, வளசரவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர்கள் இருவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.