ஏழை, எளிய மக்கள் தங்களது குறைந்த சம்பளத்தை வைத்து குடும்பத்தை நடத்துவதே கஷ்டம் என்ற சூழ்நிலையில், அவர்களின் வங்கி கணக்குகளில், கோடிக்கணக்கில் வரி பாக்கி உள்ளதாக செய்திகள் வெளியாவது பெரும் அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது. நாடெங்கும் சமீப காலமாகவே ஆவண மோசடிகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், ஏழை, எளிய கூலித் தொழிலாளர்களின் அடையாள ஆவணங்களை திருடி, அவர்களுடைய பெயர்களில் போலியான நிறுவனங்களை பதிவு செய்து, GST வரி பாக்கி இருப்பதாக காட்டி மோசடிகள் செய்யும் கும்பல்கள் அதிகரித்துவிட்டன.
கடந்த மாதம்கூட, திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி திருமாஞ்சோலை புதூர் பகுதியைச் சேர்ந்த பந்தல் அமைக்கும் தொழில் செய்து வரும் ராமமூர்த்தியின் பெயரில் ரூ.5 கோடி GST வரி பாக்கி இருப்பதாக நோட்டீஸ் வந்து இருக்கிறது. `ராமமூர்த்தியின் `பான் கார்டு’, `ஆதார் கார்டு’ உள்ளிட்ட அடையாள ஆவணங்களைக் கொண்டுதான் சென்னையில் ஒரு நிறுவனம் தொடங்கப்பட்டு, வரி ஏய்ப்பு மோசடியில் மர்மநபர்கள் ஈடுபட்டிருப்பதாக’’ தெரியவந்தது.

அதேபோல, ஆம்பூர், மளிகை தோப்புப் பகுதியைச் சேர்ந்த 70 வயதான வேலாயுதம் என்ற முதியவர், கூலித் தொழிலாளியாகப் பணிபுரிந்து பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றவர். அவரது மனைவி உஷா, காலனி தொழிற்சாலையில் வேலை பார்த்ததால், அவரது மறைவுக்குப் பிறகு, மாதந்தோறும் வர வேண்டிய பி.எஃப். ஓய்வூதியத்தை வேலாயுதம் பெற்று வந்தார்.
ஆனால், சமீபத்தில் அதிகாரிகள் ரூ. 1.5 கோடி GST வரி பாக்கி இருப்பதாக கூறி அந்த ஓய்வூதியத்தை நிறுத்திவிட்டனர். வேலாயுதம் வேலூர் GST அலுவலகத்தில் முறையிட்டார். ஆனால் அதிகாரிகளோ, அவர்களை சுற்றுயுள்ள காவல் நிலையத்தில் தர சொல்லி, அதற்கான நகலை கொண்டு வரும்படி அவரை திருப்பிவிட்டார்களாம். கூலித் தொழிலாளியான தனக்குப் பல கோடி ரூபாய் வரி பாக்கி எப்படி வந்தது என்று அதிர்ச்சியடைந்த வேலாயுதம், வேலூரில் உள்ள GST அலுவலகத்திற்குச் சென்று முறையிட்டார். அங்கிருந்த அதிகாரிகள், “உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து, அதன் நகலைக் கொண்டு வாருங்கள்” என்று கூறி அவரைத் திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து, வேலாயுதம் ஆம்பூர் நகரக் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளிக்க முயன்றபோது, அங்கிருந்த காவல்துறையினர் புகாரைப் பெற மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது, மேலும் “இது பொருளாதாரக் குற்றப்பிரிவு அல்லது சென்னையில் உள்ள GST அலுவலகத்தில் மட்டுமே விசாரிக்கப்படும் வழக்கு” என்று கூறி, முதியவரைத் திருப்பி அனுப்பிவிட்டார்களாம். தன்னுடைய புகாரை எந்த அதிகாரிகளும் ஏற்க மறுத்து அலைக்கழித்து வருவதால், செய்வதறியாது தவிக்கும் வேலாயுதம், உரிய அதிகாரிகள் தலையிட்டுத் தன் கணக்கு மீதான தடையை நீக்குவதுடன், மனைவியின் ஓய்வூதியம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கண்ணீருடன் கோரிக்கை விடுத்து அனைவருக்கும் நினைவிருக்கலாம்.
இதோ இப்போது வேலூர் மாவட்டத்தில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. குடியாத்தம் அருகேயுள்ள நாகால் பகுதியை சேர்ந்த தம்பதி மகாலிங்கம் யசோதா. இதில் மகாலிங்கம் கார் ஓட்டுநராக உள்ளார். யசோதா அங்குள்ள தனியார் காலனி தொழிற்சாலையில் மாதம் ரூ. 8 ஆயிரம் சம்பளத்திற்கு வேலை பார்த்து வருகிறார். கடந்த 4-ந் தேதி யசோதாவுக்கு அவரது வங்கிக்கணக்கில் சம்பளம் போடப்பட்டுள்ளது. அந்த பணத்தை எடுக்க யசோதா சென்றபோது, போதிய பண இருப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.

உடனே யசோதா கணவர் மகாலிங்கத்தை அழைத்துக்கு கொண்டு வங்கிக்கு சென்றிருக்கிறார். அப்போதுதான் அவருடைய வங்கிக் கணக்கு 13 கோடி ரூபாய் GST பாக்கி இருப்பதாக காட்டி முடக்கப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். சம்பளமாக மாதம் 8 ஆயிரம் மட்டுமே வருவதாக இருப்பது, 13 கோடி ரூபாய் வரி எப்படி வரும்? என்று அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர். இதனை வங்கி அதிகாரிகளே நம்பவில்லையாம். அதனால்தான் யசோதாவை சென்னையில் உள்ள GST அலுவலகத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
சமீப காலமாக நாடு முழுவதும் இதுபோன்ற ஆவண மோசடிகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. கூலித் தொழிலாளிகளின் அடையாள ஆவணங்களைத் திருடி, அவர்களின் பெயர்களில் போலியான நிறுவனங்களைத் தொடங்கி GST வரி ஏய்ப்பு மற்றும் மோசடிகளில் ஒரு கும்பல் ஈடுபட்டு வருகிறது. இதனால் பாதிக்கப்படும் அப்பாவி மக்கள், காவல்துறையினராலும் அதிகாரிகளாலும் அலைக்கழிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. எனவே இந்த ஆவண மோசடிகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு அதிகாரிகள் விரைந்து நீதி வழங்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.