இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படத்தை யூடியூப், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சினிமாவில் காப்பி ரைட்ஸ் பிரச்சனை அதிகளவு உள்ள நிலையில் இசையில் காப்புரிமை பிரச்சனை காட்டு தீ போல பற்றி எரிந்து கொண்டுள்ளது. அதிலும் இசையமைப்பாளர் இளையராஜா மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தொடங்கி நடிகர் அஜித்குமாரின் குட் பேட் அக்லி படம் வரை காப்புரிமை விவகாரத்தில் பயங்கர கறார் காட்டியது மட்டுமின்றி சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்நிலையில் சோனி உள்ளிட்ட பிரபல இசை நிறுவனங்கள் மற்றும் சில யூடியூப் சேனல்களில் தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்தி வருவாய் ஈட்டுவதற்கு தடை கேட்டு இளையராஜா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இளையராஜா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் மற்றும் சரவணன் ஆகியோர், இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்தும், ஏஐ தொழில்நுட்பத்தில் மாற்றியும் பயன்படுத்தி வருவாய் ஈட்டுவதாகக் குற்றம் சாட்டினர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, பெயரை, புகைப்படங்களை பயன்படுத்துவதால் இளையராஜாவுக்கு என்ன பாதிப்பு ஏற்படுகிறது எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு மூத்த வழக்கறிஞர், “தனது புகைப்படத்தையோ, பெயரையோ வணிக ரீதியாக பயன்படுத்தி வருவாய் ஈட்டுகின்றனர். இது தனது தனிப்பட்ட உரிமையை பாதிக்கும் செயல் என்பதால், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ரீல்ஸ், மீம்ஸ்களில் அனுமதி இன்றி இளையராஜா புகைப்படத்தை பயன்படுத்துவதாகவும், சில நேரங்களில் அவதூறான கருத்துக்களும் பதிவிடப்படுகிறது” என்றும் வாதிட்டார்.
இளையராஜா தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, சமூக வலைதளங்களில் இளையராஜாவின் புகைப்படத்தை அனுமதி இன்றி பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் மனுவுக்கு பதில் அளிக்கும்படி யூடியூப் சேனல்களுக்கும் நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார். மேலும் சோனி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட இசை நிறுவனங்கள் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. இந்த உத்தரவு சோனி உள்ளிட்ட பிரபல நிறுவனங்களுடன் ஆயிரக்கணக்கான யூடியூப் சேனல்களுக்கு செக் வைக்கும் வகையில் அமைந்துள்ளது. அதேநேரத்தில் இந்த உத்தரவால் வழக்கம் போல இளையராஜா மீது இணையதளவாசிகள் விமர்சனங்களையும் வைத்து வருகின்றனர்.