அமெரிக்க அரசின் நிதி முடக்கநிலையால் ஊதியமின்றி ஊழியர்கள் கட்டாய விடுப்பில் சென்ற காரணத்தால் முக்கிய துறைகளின் சேவைகள் ஸ்தம்பித்துள்ளது. இந்நிலையில் தான் 40 விமான நிலையங்களில் இருந்து 500-க்கும் அதிகமான விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
அமெரிக்க அதிபராக செயல்பட்டு வரும் டொனால்ட் டிரம்ப் உலக நாடுகள் மீது வரி விதிப்பது, அமெரிக்காவின் குடியேற்ற சட்டத்தில் கடுமை காட்டுவது, எச் 1பி விசா கட்டணத்தை உயர்த்தியது என்று பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு ஒருதரப்பினர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் இன்னொரு தரப்பினர் டொனால்ட் டிரம்பின் செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அடுத்த நிதியாண்டுக்கு தேவையான நிதியை விடுவிப்பதில் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு நிதிவிடுவிப்பு தடைபட்டுள்ளது. அக்டோபர் 1-ந் தேதி முதல் நிதி முடக்கம் தொடங்கியது. தற்போது ஒரு மாதத்தை கடந்தும் நிலைமை சரியாகவில்லை. இதையடுத்து, அரசின் முக்கிய துறைகள் அனைத்தும் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவைகளில் பணிபுரியும் பணியாளர்கள் ஊதியமின்றி பணியாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதனால் ஊழியர்களில் ஒரு தரப்பினர் விடுப்பில் சென்றுள்ளனர்.
அமெரிக்காவில் நிதி முடக்கத்தால் 6.70 லட்சம் அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் உள்ளதாகவும், 7.30 லட்சம் பேர் ஊதியமின்றி பணிபுரிவதாக சொல்லப்படுகிறது. இதனால் அமெரிக்காவில் பல்வேறு சேவைகள் முடங்கி உள்ளது. குறிப்பாக விமான சேவையும் முடங்கி உள்ளது. அதன்படி நியூயார்க், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ் உள்பட 40 விமான நிலையங்களில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் மொத்தம் 500க்கும் அதிகமான விமானங்களின் சேவைகள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் நாடு முழுவதும் 10 சதவீதம் அளவுக்கு விமான போக்குவரத்தை குறைக்க அமெரிக்க விமான போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. இந்நிலை நீடிக்கும் பட்சத்தில் அமெரிக்க மக்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்திப்பார்கள். இதனால் டொனால்ட் டிரம்புக்கு நெருக்கடி ஏற்பட்ட வாய்ப்பு உள்ளது.