பாகிஸ்தான் வீரர்கள் ஹாரிஸ் ரவுஃப் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆகியோர் செய்த சர்ச்சைக்குரிய சைகைகளுக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும், மத்திய பாஜக அரசுமே பொறுப்பு என்று சிவசேனா கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத் கடுமையாகச் சாடியுள்ளார். துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற சூப்பர் ஃபோர் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. பின்னர் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, தொடக்கம் முதலே அதிரடி காட்டியது.
தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் ஷர்மா மற்றும் சுப்மன் கில் முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர். அபிஷேக் ஷர்மா வெறும் 39 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 28 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். இறுதியில், திலக் வர்மா 30 மற்றும் ஹர்திக் பாண்டியா 7ஆகியோர் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இந்திய அணி 18.5 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின்போது, பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் தனது அரைசதத்தை பேட்டை ஒரு AK-47 துப்பாக்கி போலப் பாவித்து சுடுவது போலக் கொண்டாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், ஹாரிஸ் ரவுஃப் எல்லைக்கோட்டுக்கு அருகே ஃபீல்டிங் செய்தபோது, இந்திய ரசிகர்கள் 2022 T -20 உலகக் கோப்பையில் விராட் கோலி அடித்த சிக்ஸரை நினைவுபடுத்தி, “கோலி, கோலி” என்று முழக்கமிட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஹாரிஸ் ரவுஃப், ‘ஆபரேஷன் சிந்தூர்’ மோதலின் போது ஆறு இந்திய போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறும் ஆதாரமற்ற தகவலைக் குறிப்பிடும் வகையில், ‘6-0’ என்று சைகை காட்டியதும் பெரும் கண்டனங்களைப் பெற்றது இது கடந்த மே மாதம் நடந்த ராணுவ மோதலில் பாகிஸ்தான் ஆறு இந்திய போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகக் கூறப்படுவதைக் குறிப்பதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. மேலும், விமானம் சுட்டு வீழ்த்தப்படுவதைப் போல அவர் நடித்துக் காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் செயல்களுக்குப் பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் உட்பட பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இந்தியாவில் அரசியல் தலைவர்களும் இந்த விவகாரத்தில் நேரடியாகக் களமிறங்கியுள்ளனர். சிவசேனா (UBT) கட்சியின் தலைவரும், எம்.பி-யுமான சஞ்சய் ராவத், BCCI -யையும் மத்திய அரசையும் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து சஞ்சய் ராவத் தனது எக்ஸ் பக்கத்தில், “பாகிஸ்தான் தீவிரவாதிகள் எப்படி அப்பாவி மக்களைப் படுகொலை செய்தார்கள் என்பதை சாஹிப்சாதா ஃபர்ஹான் களத்திலேயே நிரூபித்துவிட்டார். அரைசதம் அடித்ததும், பேட்டை ஒரு AK-47 போலப் பிடித்து சுட்டிருக்கிறார்! இது பிசிசிஐ மற்றும் மோடி அரசின் தோல்வி. இந்தியாவின் இந்த அவமானத்திற்கு வழிவகுத்த ஜெய் ஷாவுக்கு பாரத ரத்னா விருதுதான் கொடுக்க வேண்டும்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.