தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற தாசில்தார் வீட்டில் 4 பவுன் நகை, மற்றும் ரூ.2 லட்சம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர. தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் 6-வது தெருவில் வசித்து வரும் கணேசன், ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மனைவி சந்திரா. கணவன் மனைவி இருவரும் கடந்த வாரம் வீட்டை பூட்டிவிட்டு ஓசூரில் உள்ள மகன் வீட்டிற்கு சென்று விட்டனர். இந்நிலையில் இன்று காலை கணேசன் வீட்டின் கதவுகள் திறந்து கிடந்தன. இதையப்பார்த்த பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் கணேசனுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், இதுகுறித்து வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் பேரில் காவல் ஆய்வாளர் பாலமுருகன், காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மர்ம நபர்கள் நேற்று இரவு வீட்டின் பூட்டை உடைத்து நகை பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. கணேசன், வீட்டில் பீரோவில் 4 பவுன் நகையும் ரூ.2 லட்சம் பணமும் இருந்ததாக தெரிவித்துள்ளார். அவர் ஊர் திரும்பியதும் திருடுபோன பொருட்களின் முழு விபரம் தெரியவரும். இது தொடர்பாக புகாரின் பேரில் வடபாகம் காவல்துறையின் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.