திமுக, தேமுதிக கூட்டணி பேச்சு வார்த்தைகளில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி, மற்றும் 2026 தேர்தலில் 10 சீட்டுகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில் தேர்தல் பணிகளை பிரதான அரசியல்கட்சிகளான திமுகவும், அதிமுகவும் அதி மும்முரமாக தொடங்கியுள்ளது.
மேலும் தமிழக அரசியல் களத்தில் திமுக மற்றும் அதிமுக இரு கட்சிகளும் அடுத்தடுத்து இருமுறை ஆட்சி அமைக்க முடியாமல் இருந்ததை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடைத்து அதிமுக அடுத்தடுத்து வென்று ஆட்சி அமைத்தார் . அதோபோல திமுக அடுத்தடுத்து வென்று ஆட்சி அமைத்ததில்லை என்ற குறையை போக்க மு.க.ஸ்டாலின், தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார். மறுபுறம், அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிச்சாமி தன் மீதான தொடர் தோல்வி விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என விரும்புகிறார்.
மேலும் விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொமதேக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் சில அமைப்புகள் 2019 தேர்தலுக்கு முன்னதாக திமுக கூட்டணி உருவான நிலையில் அதில் இருந்த கட்சிகள் தற்போது வரை தொடர்ந்து பக்கபலமாக இருக்கிறது.

ஆனால், அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அமைந்திருக்கும் நிலையில், பாஜகவோடு கடந்த காலங்களில் கூட்டணி அமைத்திருந்த தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, மக்கள் முன்னேற்ற கழகம், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் சேரலாம் என கூறப்படுகிறது. மேலும் பாமகவும் அதிமுக கூட்டணிக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக -வுடன் கூட்டணியில் இருந்த ஒரே கட்சி தேமுதிக. ஏற்கனவே பேசி வைத்தபடி தேமுதிக -விற்கு ஒரு மாநிலங்களவை எம்.பி சீட்டை பெறுவோம் என பிரேமலதா விஜயகாந்த் உறுதியாக நம்பிய நிலையில், நாங்கள் அப்படி ஒன்றும் சொல்லவில்லை என எடப்பாடி நழுவிக்கொண்டதால் பிரேமலதா விஜயகாந்த் இன்னும் யாருடன் கூட்டணி என்பதை தெளிவுபடுத்தவில்லை.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை கடந்த வாரம் அவரது இல்லத்தில் பிரேமலதா விஜயகாந்த் இன்று சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் உடனிருந்தார். இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் திமுகவுடன் தேமுதிக மறைமுக கூட்டணி பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்ததாக தகவல் வெளியான நிலையில், தற்போது கூட்டணி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டது என்கின்றனர் தேமுதிக வட்டாரத்தினர்.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு தராத நிலையில் கடந்த மாதமே திமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தைகள் தொடங்கியதாகவும், அதன் வெளிப்பாடாகத்தான் முதலமைச்சர் ஸ்டாலினை பிரேமலதா நேரில் சந்தித்து பேசினார் என சொல்லப்படுகிறது. இதுமட்டுமின்றி, ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தருவதாக திமுக தரப்பில் உறுதியளித்ததாகவும், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 10 சட்டமன்ற தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது.