தலைவர்கள் பொய் சொல்வதற்கு வாய்ப்பு இல்லை, ஓ பன்னீர்செல்வம் இன்னும் நிதானமாக தனது அரசியல் நகர்வுகளை செய்திருக்க வேண்டும் என தமிழக மூத்த பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஆக இருந்து பின்னர் அங்கிருந்து ஓரங்கப்பட்டு வெளியேறி அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை ஓ.பன்னீர்செல்வம் உருவாக்கினார். பாஜக உடன் கூட்டணி வைத்து கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோல்வியும் தழுவினார். ஒவ்வொரு முறையும் தமிழகம் வரும் மோடி மற்றும் அமித்ஷா ஓ பன்னீர் செல்வத்தை சந்திக்க அனுமதி கொடுத்ததில்லை.
கடந்த மாதம் தூத்துக்குடி மற்றும் சோழபுரம் வருகை தந்த பிரதமர் மோடி ஓ பன்னீர்செல்வத்தை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. ஓ பன்னீர்செல்வம் மோடிக்கு கடிதம் அனுப்பியும் அவர் நேரம் ஒதுக்காததால் கடும் அதிருப்தியில் இருந்தார். இதையடுத்து மத்திய அரசை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்த ஓ. பன்னீர்செல்வம் பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்ட பிறகு இப்படி நடந்துள்ளதால் அவரை விமர்சித்து ஓ.பன்னீர் செல்வம் கூறி இருந்தார். இதற்கு தமிழிசை சவுந்தரராஜன் நயினார் நாகேந்திரனை ஓ பன்னீர்செல்வம் குறை சொல்வதை ஏற்க முடியாது என்று தெரிவித்தார். பாஜக என்ற கட்சியில் இருக்கிறோம். அதன்படி எங்கள் தலைவரை ஒருவர் குறை கூறுவதை எங்களால் ஏக முடியாது. ஓ பன்னீர்செல்வம் இன்னும் நிதானமாக முடிவு எடுத்து இருக்க வேண்டும்.
இன்னும் நிதானமாக தனது அரசியல் நகர்வுகளை ஓ. பன்னீர்செல்வம் செய்திருக்க வேண்டும். ஓ. பன்னீர்செல்வம், நயினார் நாகேந்திரன் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. நயினார் நாகேந்திரன் தொடர்பாக ஓ. பன்னீர் செல்வம் கூறியதற்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை. அதே நேரம் தலைவர்கள் பொய் சொல்வதற்கு வாய்ப்பு இல்லை என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.