அரியலூர் மாவட்டத்தில் உலக தாய்ப்பால் வார விழா மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி அவர்கள் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், குழந்தைகள் நலப்பிரிவு சார்பில் 2025-ஆம் ஆண்டிற்கான உலக தாய்ப்பாலூட்டல் வாரத்தின் தொடக்க விழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ. இரத்தினசாமி அவர்கள் துவக்கி வைத்து, தாய்ப்பாலூட்டல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
ஓவ்வொரு வருடமும் உலக தாய்ப்பால் வார விழா ஆகஸ்ட் மாதம் 1 -ஆம் தேதி முதல் 7 -ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. பிறந்த குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் தாய்ப்பாலில் மட்டுமே அமைந்துள்ளது. அந்தவகையில் “தாய்ப்பாலூட்டுதலை முதன்மைப்படுத்துவோம் நிலையான அரவணைக்கும் அமைப்புகளை உருவாக்குவோம்” என்ற கருப்பொருளை மையமாககொண்டு 2025-ஆம் ஆண்டிற்கான உலக தாய்ப்பாலூட்டல் விழாவானது இன்றையதினம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் பொ. இரத்தினசாமி பேசுகையில் , பிறந்த குழந்தைகளின் வளர்ச்சிக்கு தாய்ப்பாலூட்டல் எத்தகைய முக்கியத்துவம் உடையது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக தாய்ப்பால் வார விழா ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தாய்ப்பாலூட்டல் அவசியம், தாய்ப்பாலின் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி, ஆரோக்கியமான வளர்ச்சி உள்ளிட்டவற்றை தாய்மார்கள் அறிந்துகொள்ளும் வகையில் இத்தகைய விழாக்கள் நடத்தபடுகிறது.
தாய்ப்பாலூட்டல் என்பது மிக மிக அவசியமான ஒன்றாகும். இதன் முக்கியத்துவம் கருதி அனைவரிடமும் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பொ.இரத்தினசாமி அவர்கள் பேசினார். மேலும், மருத்துவமனையை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக, உலக தாய்ப்பால் வார விழாவினை முன்னிட்டு, தாய்ப்பால் வார உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இவ்விழாவில் கலந்துகொண்ட 50-க்கும் மேற்பட்ட தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து தாய்ப்பாலூட்டல் பற்றிய தகவல்கள், கல்வி மற்றும் தொடர்பு நூல் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், அரியலூர் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் முத்துக்கிருஷ்ணன், அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவு துறை தலைவர் செந்தில்குமார், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ், இருக்கை மருத்துவ அலுவலர் க. கொளஞ்சிநாதன், மருத்துவ சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் எழில்நிலவன், சிவக்குமார், ராஜராஜன், சின்னசாமி மற்றும் ராதாகிருஷ்ணன், தாய்மார்கள், இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.