அண்ணா பெயரில் கட்சி நடத்தும் கூட்டம் பெரியார், அண்ணா தொடர்பாக கொச்சையாக வீடியோ ஒளிபரப்பியதை அதிமுக வேடிக்கை பார்க்கிறது. இவர்கள் அண்ணாவை அடமானம் வைத்தது போல நாளை தமிழ்நாட்டை அடமானம் வைப்பார்கள் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, R. B உதயகுமார், கடம்பூர் ராஜு ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள் முன்பாகவே முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணா உள்ளிட்டோரை கடுமையாக சாடி வீடியோ ஒளிபரப்பப்பட்டது. இதனை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் பார்த்துக் கொண்டிருந்தது கடும் விமர்சனங்களைக் கிளப்பிவிட்டுள்ளது.
இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில், திமுகவினர் கடுமையான விமர்சனத்தை அதிமுக மீது வைத்தனர். அண்ணாவின் பெயரில் கட்சி நடத்தி கொண்டு அண்ணாவை விமர்சித்த வீடியோ ஒளிபரப்பான போதும் அமைதி காத்ததாக விமர்சித்தனர். இதன்பின் ராஜேந்திர பாலாஜி, ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர் பதில் அளித்தனர். அதேபோல் அதிமுக ஐடி விங் தரப்பில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்து முன்னணிக்கு தனது கண்டனத்தை பதிவு செய்தார். ஆனால், அண்ணாவை விமர்சித்த இந்து முன்னணி மற்றும் பாஜக குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதுவரை கருத்து கூறவில்லை. ஆகையால், இந்த விவகாரம் அதிமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் திருப்பத்தூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், மகளிர் உரிமைத் தொகை சில பகுதிகளில் கிடைக்காத விடுபட்டிருக்கிற நிலை இருந்து கொண்டு இருக்கிறது. விடுபட்டவர்களுக்கான மகளிர் உரிமைத் தொகை ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
மத்தியில் ஆட்சி செய்பவர்கள் தமிழ்நாட்டு மக்களை மதத்தால், சாதியால் தொடர்ந்து பிளவுபடுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களால் முடியாத போது, அதிமுகவையும் சேர்த்து கொள்கிறார்கள். நாட்டின் வேலைவாய்ப்பு விகிதம் குறைகிறது என்று கூறினால், அதிமுக – பாஜக தரப்பில் மதத்திற்காக கவலைப்படுகிறார்கள். இதுதான் அவர்களின் அரசியல்.
தமிழ்நாட்டில் இந்து மதத்திற்கு ஆபத்து என்று அதிமுகவை வைத்து கொண்டு பாஜக சொல்லி வருகிறது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிதான் ஆபத்து. இப்போது அரசியல் லாபத்திற்காக கடவுளின் பெயரை பயன்படுத்தி வருகிறார்கள். இவர்களின் போலி பக்தி, அரசியல் நாடகத்தை யாரும் ஏற்க மாட்டார்கள். இது தந்தை பெரியார், அண்ணா உருவாக்கி வளர்த்த மண்.
தமிழ்நாடு மத நல்லிணக்க மண். கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 3 ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. பாஜகவால் தமிழ்நாட்டுக்கு செய்த வளர்ச்சியை சொல்லி வாக்கு கேட்க முடியாது. ஏனென்றால் தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை. அதனால் மதத்தை வைத்து அரசியல் செய்ய முயற்சிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த படாதபாடு படுகிறார்கள். பெரியார், அண்ணாவை கொச்சைப்படுத்தி வீடியோ போகிறார்கள். அதனை அண்ணா பெயரில் கட்சி நடத்தும் கூட்டம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. அண்ணா பெயரை அடமானம் வைத்த அதிமுகவை, நாளை தமிழ்நாட்டை அடமானம் வைக்க அனுமதிக்க கூடாது என தெரிவித்துள்ளார்.