4-ம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை 200-க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் கடந்த 12-ந் தேதி பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த 4-ம் வகுப்பு படித்து வரும் சிறுமியை மர்ம நபர் பின் தொடர்ந்து, அவரை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி தப்பி ஓடினார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பாட்டியிடம் தெரிவித்தார். இதையடுத்து சிறுமி, பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதை உறுதி செய்தனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சிறுமி சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிறுமியின் உடல்நிலை சீரானதால் நேற்று மருத்துவமனையில் இருந்து கடந்த 19-ந் தேதி வீடு திரும்பினார்.

இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 3 காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளியைத் தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
இந்நிலையில், சம்பவம் நடந்து 10 நாட்கள் கடந்தும் சிறுமியை வன்கொடுமை செய்த இளைஞர் கைது செய்யப்படாததை கண்டித்து பாமக பொருளாளர் திலகபாமா தலைமையில் பாமகவினர், புரட்சி பாரதம் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் ஆரம்பாக்கம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தியாதல் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.