சென்னை அம்பத்தூர் காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு உதவி ஆய்வாளராக அந்தோணி மாதா 2 மகன்களை விட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழக காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த அந்தோணி மாதா சென்னை அம்பத்தூர் காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 10 வருடங்களுக்கு முன்பு யோவான் என்பவருடன் திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு 10 மற்றும் 8 வயதில் 2 மகன்கள் இருக்கிறார்கள். கடந்த 3 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக அந்தோணி மாதா, கணவரை பிரிந்து அம்பத்தூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் தனியாக வீடு எடுத்து தனது 2 மகன்களுடன் வசித்து வந்தார்.
இவர் கடந்த 2021-ஆம் ஆண்டு காவல்துறையில் உதவி ஆய்வாளராக தமிழ்நாடு காவல்துறையில் பணிக்கு சேர்ந்திருக்கிறார். தற்போது 3 ஆண்டுகளாக கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த அந்தோணி மாதா, அவருடன் பணியில் சேர்ந்த மற்றொரு ஆண் உதவி ஆய்வாளர் ஒருவருடன் பழகி உள்ளார். கடந்த 2 வருடங்களாக இருவரும் நெருக்கமாக பழகி வந்தனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அந்தோணி மாதாவிடம் பேசுவதை அந்த உதவி ஆய்வாளர் குறைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்தோணி மாதா மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்தோணி மாதா, அந்த உதவி ஆய்வாளரிடம் அலைபேசியில் வீடியோ காலில் பேசும்போது உடனடியாக தன்னை பார்க்க வரும்படி கூறியிருக்கிறார். ஆனால் அந்த காவல் உதவி ஆய்வாளர் மறுத்ததாக தெரிகிறது. அதற்கு அந்தோணி மாதா, “என்னை பார்க்க வரவில்லை என்றால் வாழ்க்கையை முடித்துக் கொள்வேன்” என மிரட்டியுள்ளார். ஆனால் அடிக்கடி அவர் இதுபோல் மிரட்டி வந்தாராம். அதனை உதவி ஆய்வாளர் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக அலைபேசி இணைப்பை துண்டித்து விட்டாராம்.
எனினும் சிறிதுநேரம் கழித்து அவர், அந்தோணி மாதாவுக்கு போன் செய்தார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் அலைபேசியை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர், அம்பத்தூர் காவல்துறையினக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக அந்தோணி மாதா வீட்டுக்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அந்தோணி மாதா தூக்கிட்டு தற்கொலை செய்து வாழ்க்கையை முடித்துக் கொண்டதை கண்டு ஆடிப்போனார்கள். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மன அழுத்தத்தில் தற்கொலை எண்ணம் இருந்தால் உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள் மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது). ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு. AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 ) என்றும் எண்களை அழைத்து தற்கொலை செய்து கொள்வதில் இருந்து மீண்டு ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்.