சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையத்தை சேர்ந்த நல்லம்மாள் தனது காலி இடத்தை பேரனுக்கு பத்திரப்பதிவு செய்ய ரூ.15 ஆயிரம் லஞ்சமாக கேட்ட சார் பதிவாளர், தற்காலிக ஊழியரும் கைதான பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையத்தை சேர்ந்த நல்லம்மாள் என்பவருக்கு 1,916 சதுர அடி காலி இடம் இருக்கிறது. நல்லம்மாள் தனது பேரன் அருணுக்கு பத்திரப்பதிவு செய்ய நம்பியூர் சின்ன பீளமேட்டை சேர்ந்த இ-சேவைமயம் நடத்தி வரும் சேதுபதி என்பவரை அணுகி இருக்கிறார்.
சேதுபதி இதுகுறித்து சத்தியமங்கலத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று சார்பதிவாளர் தமிழ்ச்செல்வன் என்பவரிடம் தெரிவித்து உள்ளார். அதற்கு அவர், பத்திரப்பதிவு செய்ய ரூ.15 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத சேதுபதி இதுகுறித்து ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து ஈரோடு லஞ்ச ஒழிப்புத் துறை ரசாயனம் தடவிய ரூ.15 ஆயிரத்தை சேதுபதியிடம் கொடுத்து அனுப்பி உள்ளார்கள். இதையடுத்து அவர் நேற்று காலை 11 மணி அளவில் சத்தியமங்கலம் சார்பதிவாளர் அலுவலகம் சென்று சார்பதிவாளர் தமிழ்ச்செல்வனிடம் ரூ.15 ஆயிரத்தை கொடுக்க முயன்றுள்ளார்.
அதற்கு தமிழ்ச்செல்வன், அந்த பணத்தை தற்காலிக ஊழியரான தர்மபுரி மாவட்டம் பாப்பராம்பட்டியை சேர்ந்த 35 வயதாகும் சக்திவேல் என்பவரிடம் கொடுத்து விடும்படி கூற அதனைத் தொடர்ந்து தற்காலிக ஊழியர் சக்திவேலிடம் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை தற்காலிக ஊழியர் சக்திவேலையும், சார்பதிவாளர் தமிழ்ச்செல்வனையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதனால் அந்த பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.