தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதல் தேர்தல் பிரச்சாரத்தில் திருச்சி நகருக்குள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தனது முதல் பிரச்சார பயணத்தை தொடங்குகிறார். இதனையடுத்து காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திருச்சி மரக்கடை பகுதியில் MGR சிலை அருகே பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி அளித்தது.
கட்டிடங்கள், மரங்கள் உள்ளிட்டவற்றின் மேல் விஜய் கட்சியினர் ஏறக்கூடாது, பட்டாசு வெடிக்கக்கூடாது, உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில் பிரச்சாரத்தில் கலந்து கொள்வதற்காக தனி விமானம் மூலம் விஜய் திருச்சி விமான நிலையம் வந்து அடைந்தார். விஜயின் வருகையை ஒட்டி திருச்சியில் உள்ள சட்டமன்றத் தொகுதிகள் மட்டுமல்லாமல் புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி ஆகிய பகுதிகளில் இருந்தும் ஏராளமான ரசிகர்கள் திருச்சி நோக்கி விரைந்தனர்.
தொடர்ந்து விமான நிலையத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலைய வளாகத்துக்குள் ரசிகர்கள் அனுமதிக்கப்படாமல் இருக்க, காவல்துறை தடுப்புகளை அமைத்து இருந்தது. ஆனால், அவற்றையெல்லாம் உடைத்துவிட்டு விஜயைக் காண ரசிகர்கள் சென்றதால், விமான நிலையம் பரபரப்புக்குள்ளானது. மேலும், விஜய் கட்சியினர் காவல்துறையினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது.
தொடர்ந்து, திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் TVS டோல்கேட் வழியாக திருச்சி நகருக்குள் சென்றார். TVS டோல்கேட் பகுதியில் இருந்து தலைமை தபால் நிலைய சிக்னல், மேலப்புதூர் சுரங்கப்பாதை வழியாக பயணிக்கும் விஜய், அதற்குப் பிறகு பாலக்கரை பிரபாத் ரவுண்டானா, பழைய மதுரை சாலை வழியாக மரக்கடை பகுதியில் பிரச்சாரம் செய்கிறார். மரக்கடையில் பிரச்சாரத்தை முடித்ததும் காந்தி மார்க்கெட், தர்பார் சாலை, பழைய பால்பண்ணை வழியாக அரியலூர் செல்லும் வகையில் விஜயின் பயணத்திட்டம் வகுக்கப்பட்டு இருந்தது.
10:30 மணிக்கு விஜயின் பிரச்சாரம் தொடங்கும் என காவல்துறையினர் கூறியிருந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளியே வருவதற்கே ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆனது. விஜய் பைபாஸை கூட தாண்டாத நிலையில் திருச்சியின் அனைத்துப் பகுதிகளிலும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. விஜயின் வாகனத்தை 5 வாகனங்கள் தான் பின்தொடர வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தி இருந்த நிலையில் 5000-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் விஜயைப் பின்தொடர்ந்து வந்தனர். இதனால் திருச்சி விமான நிலைய சாலை மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.