திமுகவிடம் எப்போது கம்யூனிஸ்ட் கட்சியினர் கைநீட்டி பணம் வாங்கினார்களோ அப்போதே “கம்யூனிஸ்ட் கட்சி திமுகவிற்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்து விட்டார்கள்” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ எனும் பெயரில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அதன்படி திருவாரூர் மாவட்டம், கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட நன்னிலம் கிராமத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது எடப்பாடி பழனிசாமி, பேருந்தில் இருந்து இறங்கி மாட்டு வண்டி ஓட்டினார். அதைத்தொடர்ந்து பேசுகையில், “திமுகவில் உறுப்பினர்கள் குறைந்து விட்டார்கள். அதனால் தான் ஓரணியில் தமிழ்நாடு வீடு வீடாக வந்து சந்தித்து வருகிறார்கள். யாரும் ஏமாந்து விடாதீர்கள். ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் ஆசையை தூண்ட வேண்டும். ஒரு முறை ஏமாந்து விட்டீர்கள் மீண்டும் ஏமாறாதீர்கள்.
50 ஆண்டுகளாக காவிரி பிரச்சனை தீர்க்க முடியவில்லை. காவிரி நதிநீர் பிரச்சினையில் தீர்ப்பு பெற்றுத் தந்த அரசாங்கம் அதிமுக அரசு. திமுக செய்யும் தவறுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் உடந்தையாக உள்ளன. கம்யூனிஸ்ட் கட்சிக்கென தனித்தன்மை இருந்தது. மக்கள் பாதிக்கப்பட்டால் கொடி பிடித்து போராடிக் கொண்டு இருந்தவர்கள், இன்று திமுக அரசாங்கத்திற்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்து விட்டார்கள்.

திமுகவிடம் எப்போது கம்யூனிஸ்ட் கட்சியினர் கைநீட்டி பணம் வாங்கினார்களோ, அப்பொழுதே கம்யூனிஸ்ட் கட்சி முடிந்து விட்டது. பணத்தை வாங்கிய காரணத்தினால் இன்று மௌனம் சாதிக்கிறீர்கள். மக்கள் பிரச்சினையை கூட இன்று வெளியில் கொண்டுவர மாட்டீர்கள். இப்படி இருக்கையில் மக்கள் எப்படி நம்புவார்கள்.
போராட்டம் நடத்தினால் அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தல் சீட்டை குறைத்து விடுவார்கள். குறை சொல்வதாக எண்ணிவிடாதீர்கள். இருக்கக்கூடிய எதார்த்தத்தை சொல்கிறேன். கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு படைத்த இயக்கம். உங்களை குறை சொல்லி நாங்கள் கட்சி வளர்க்க வேண்டிய அவசியம் இல்லை. மக்களுக்காக உழைத்த கட்சி இன்று தேய்ந்து கொண்டிருக்கிறது” என எடப்பாடி பழனிசாமி பேசினார்.