பாமக MLA அருளை கட்சியில் இருந்து நீக்க அன்புமணிக்கு யாரும் அதிகாரம் கொடுக்கவில்லை, அன்புமணி பற்றி என்னிடம் கேட்காதீர்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் ஆங்கில மொழிப் புலமையை வளர்த்தெடுக்க ‘level up’ என்ற திட்டத்தை 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை விரிவுப்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திண்டிவனம் தைலாபுரத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ராமதாஸ் பதிலளித்தார். அப்போது, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் ஆங்கில மொழிப் புலமையை வளர்த்தெடுக்க ‘level up’ என்ற திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளதை வரவேற்கிறோம். இத்திட்டத்தை 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை விரிவுப்படுத்த வேண்டும்.
சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. எனவே, பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி வழங்கும்போது கடுமையான விதிகளைப் பின்பற்ற வேண்டும். இந்த விவகாரத்தில் இழப்பீடு கோரி போராடிய சிஐடியு தோழர்களை விருதுநகர் காவல் கண்காணிப்பாளர் கண்ணன் எச்சரித்துள்ளது கண்டனத்துக்குரியது. திருப்புவனத்தில் காவல்துறையினரால் கொல்லப்பட்ட அஜித்குமார் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். இந்த சம்பவத்துக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாமக MLA அருளை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை. நிறுவனர், தலைவரான எனக்கு மட்டும்தான் உள்ளது. அன்புமணி தொடர்பான கேள்வியை என்னிடம் கேட்பதை தவிர்க்க வேண்டும். அந்த அளவுக்கு மன வேதனைப்பட்டுள்ளேன். கூட்டணி தொடர்பாக திமுக, அதிமுகவுடன் கூட்டணி பாமக பேச்சுவார்த்தை நடத்துகிறது என்பது வதந்தியாகும். வன்னியர் சங்கம் சார்பில் பூம்புகாரில் ஆகஸ்ட் 10-ந் தேதி நடைபெறும் மகளிர் மாநாட்டில் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த மகளிரும் கலந்துகொள்ளலாம் என ராமதாஸ் தெரிவித்தார்