தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே.. தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே..’ நெஞ்சை உருக்கும் பாடல்வரிகளை அனைவரது மனதிலும் நிழலாடுவதை உணர முடிகிறது. தாயின் கருவறையில் 10 மாதம் கருவை சுமந்து, மரணத்தோடு போராடி பிள்ளையை எடுக்கிறாள். ஆனால், தாய் கருவுற்றிருக்கும் காலம் முதல் பிள்ளை பிறந்து வளர்ந்து வாழும் காலம் முழுவதிலும் பிள்ளைக்காக ஒரு சுமைதாங்கியாக விளங்குவதோடு அவள் பெற்ற பிள்ளையை அறிவிற் சிறந்தவனாகத் தன் செல்வம் முழுவதையும் செலவழித்து தந்தை ஆளாக்கிக் காக்கிறார்.
பிள்ளைகளின் முகத்தில் புன்னகையை காண, தன் முகத்துக்கு பின்னால் சோகத்தை மறைக்கும் தந்தையருக்கு நன்றி செலுத்தும் விதமாக, உலக நாடுகள் பலவும் ஆண்டுதோறும், ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை, தந்தையர் தினமாக கொண்டாடுகின்றனர்.
உலகே தந்தையர் தினம் கொண்டாடும் தருணத்தில் 85 வயதில் பாமகவை தொய்வின்றி நடத்த எனக்கு ஆதரவு உள்ளது என் உத்தரவுபடி செயல் தலைவராக செயல்படுவேன் என அன்புமணி கூறினால் எனக்கு மகிழ்ச்சி என்றவர், 2026 தேர்தல் வரை நான்தான் தலைவராக இருப்பேன். அதன் பிறகு எல்லாம் அன்புமணிதான் என கூறினார். மேலும், குலசாமி என்று கூறிக்கொண்டே என் நெஞ்சில் குத்துகிறார்கள், எல்லாம் அய்யாதான் என்று சொல்லிக்கொண்டே பாதாளத்தில் தள்ளப் பார்க்கிறார்கள் என்ற ஆதங்கத்தை 2025 ஜூன் 12-ந் தேதி செய்தியாளர்கள் சந்திப்பில் ராமதாஸ் வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் 2025 ஜூன் 13-ந் தேதி மீண்டும் தைலாபுர தோட்டத்தில் திடீரென செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், என் மூச்சு உள்ளவரை நான்தான் தலைவராக இருப்பேன். அன்புமணியின் செயல்பாடுகளால் அவருக்கு தலைவர் பதவி வழங்க மாட்டேன். குடும்பத்தினர் அரசியலுக்கு வரக்கூடாது என கூறியதை காப்பாற்ற முடியவில்லை. பாமகவை தொய்வின்றி நடத்த எனக்கு ஆதரவு உள்ளது. கட்சியின் முக்கிய தலைவர்கள் கூறியதால்தான் அன்புமணிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என கூறினால், அதெல்லாம் பொய் என அன்புமணி கூறுவார். 2026 வரை நான் தலைவராக இருப்பேன் என நான் கூறியிருந்தேன். அந்த முடிவை மாற்றி கொள்கிறேன் என ராமதாஸ் தெரிவித்தது. நம்மையெல்லாம் நிலைகுலைய வைத்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ள கீழ்விசிறி கிராமத்தில் 1939-ம் ஆண்டு ஜூலை 25-ந் தேதி , சஞ்சீவிராயக் கவுண்டர் – நவநீத அம்மாள் தம்பதியருக்கு நான்காவது மகனாகப் பிறந்தார். பள்ளிப்படிப்பைச் சொந்த ஊரிலுள்ள காந்திஜி ஆதாரப் பள்ளியில் பயின்று, சென்னை மருத்துவக் கல்லூரியில் 1959 -1965 ஆண்டு வரை மருத்துவப் படிப்பை முடிக்கின்றார். மருத்துவப் படிப்பு முடிந்ததும் 1965 -ஆம் ஆண்டு திண்டிவனத்திலுள்ள அரசு மருத்துவமனையில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்னர், ஏழை மக்களுக்குச் சேவை செய்யும் நோக்கத்தில் சொந்தமாக மருத்துவமனை தொடங்கி, 2 ரூபாய், 3 ரூபாய் என ஏழை எளிய மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார்.
வன்னியர் சமுதாயத்தின் பின்தங்கிய நிலையைப் பற்றிச் சிந்தித்து அவர்களின் ஏழ்மை நிலையை அகற்றி கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்த வன்னியர் சமுதாய அமைப்புகளின் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தி 28 வன்னியர் அமைப்புகளை ஒன்றிணைத்து 1980-ம் ஆண்டு, ஜூலை 20-ந் தேதி `வன்னியர் சங்கம்’ என்ற புதிய அமைப்பை தொடங்கினார்.
அதன் தொடர்ச்சியாக, 1980-ம் ஆண்டு ஈரோடு கருங்கல்பாளையத்தில் வன்னியர் சமுதாயத்துக்கு கல்வி – வேலைவாய்ப்பில் `தனி இட ஒதுக்கீடு’ கோரி முதல் மாநாட்டை நடத்தினார். சென்னை மெரினாவில் 1984-ம் ஆண்டு பட்டினிப் போராட்டம், சென்னையில் 1985-ல் லட்சக்கணக்கானோருடன் பேரணி மற்றும் மாநாடு என தொடர்ந்து, 1986-ல் மட்டும் பல்வேறு காலகட்டங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், பட்டை நாமப் போராட்டம், MGR -க்கு கறுப்புக்கொடி காட்டும் போராட்டம், ஒரு நாள் சாலை மறியல் போராட்டம் மற்றும் ரயில் மறியல் போராட்டம் எனத் தொடர்ச்சியான பல போராட்டங்களை நடத்தினார்.
மேலும் `கனல்’ என்ற இதழைத் தொடங்கி திசைக்கொரு புறமாகப் பிரிந்து கிடந்த வன்னியர் சமுதாய மக்களில் பெரும்பாலானவர்களை ஒன்று திரட்டினார். மேலும் “அனைத்துச் சாதியினருக்கும் மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு, வன்னியர் சாதியினருக்கு மாநிலத்தில் 20% மத்தியில் 2% தனி ஒதுக்கீடு, தாழ்த்தப்பட்ட சாதியினருக்கான இட ஒதுக்கீட்டை 18% இருந்து 22% ஆக உயர்த்த வேண்டும்’’ போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, 17.9.1987 – 23.9.1987 வரை ஒரு வாரம் தொடர் சாலைமறியல் போராட்டத்தை வன்னியர் சங்கம் சார்பில் ராமதாஸ் அறிவித்து போராட்டம் நடத்தியதில் தமிழகத்தின் வட மாவட்டங்கள் போக்குவரத்தின்றி முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்ட இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த, தமிழக காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் தேசிங்கு, வேலு, கோவிந்தன் முதலான 21 பேர் மரணமடைந்தனர். ராமதாஸ் உட்பட 18,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தின்போது அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்த அப்போதைய முதலமைச்சர் MGR , தமிழகம் திரும்பியதும் ராமதாஸ் மட்டுமல்லாமல் அனைத்துச் சமுதாயத் தலைவர்களையும் சந்தித்துப் பேசிய ஒரு மாதத்துக்குள்ளாகவே MGR காலமானார். பின்னர், 1989-ம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்று முதலமைச்சரான கருணாநிதி, வன்னியர் சமுதாயத்துடன் சேர்த்து 108 சமுதாயங்களை `மிகவும் பிற்படுத்தப்பட்டோர்’ என்ற புதிய பட்டியலில் இணைத்து 20% இட ஒதுக்கீட்டை வழங்கினார்.
அரசியல் சார்பற்ற இயக்கமாக இருந்த “வன்னியர் சங்கம்” 1989-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி “நான் வாழ்நாளில் எந்தத் தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். நானோ எனது குடும்ப உறுப்பினர்களோ கட்சியில் எந்தப் பதவிக்கும் வர மாட்டார்கள். சட்டமன்றத்துக்கோ, நாடாளுமன்றத்துக்கோ என் கால் செருப்புக்கூட செல்லாது! இவை என் இறுதிமூச்சு வரையிலும், எனக்குப் பின்னாலும்கூட அமலில் இருக்கும்!” போன்ற ராமதாஸின் உறுதிமொழிகளுடன் `பாட்டாளி மக்கள் கட்சி’உருவெடுத்தது.
தமிழ்மொழி வளர்ச்சிக்காக `பொங்கு தமிழ்’ அறக்கட்டளை, `அலை ஓசை’ செய்தித்தாள், `மக்கள் தொலைக்காட்சி’ போன்ற செய்தி ஊடகங்களைத் தொடங்கி பிறமொழிக் கலப்பில்லாத தனித்தமிழை வளர்த்தெடுத்தார். தமிழ்த் திரைப்படங்களுக்கு தமிழிலேயே பெயர் சூட்டப்பட வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் தமிழிலேயே இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஜாதிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த தமிழகத்தில் 100 இடங்களில் அம்பேத்கர் சிலைகள் நிறுவும் திட்டத்தை ஆரம்பித்தார். தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் தமிழக முதல்வராக வர வேண்டும் எனக் குரலெழுப்பினார்.
1988-ம் ஆண்டு, கும்பகோணம் அருகிலுள்ள குடிதாங்கி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரின் சடலத்தை வன்னியர் சமுதாயம் வசிக்கும் பகுதி வழியாகக் கொண்டு செல்ல எதிர்ப்பு கிளம்பவும், தானே நேரடியாகச் சென்று வன்னிய மக்களின் எதிர்ப்பையும் மீறி சடலத்தைச் சுமந்து சென்று அடக்கம் செய்தார். இதன் காரணமாக, ராமதாஸை `தமிழ்க் குடிதாங்கி’ என்று தொல்.திருமாவளவன் அழைத்தார்.
1992-ம் ஆண்டு சென்னை பெரியார் திடலில் `தமிழர் வாழ்வுரிமை மாநாடு’ நடத்தி, அதில் தமிழீழத்துக்கு ஆதரவான தீர்மானத்தை நிறைவேற்றினார். அந்த மாநாட்டையொட்டி நடந்த பேரணியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உருவப்படத்தைப் பிடித்து தனித்தமிழீழத்துக்கு ஆதரவான முழக்கங்களும் அரங்கேற, “பிரிவினைவாத சக்திகளுக்கு தமிழகத்தில் சிறிதும் இடமில்லை” என்று கூறி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, ராமதாஸ் உள்ளிட்டோரை தேசத்துரோக வழக்கில் கைதுசெய்து சிறையில் அடைத்தார் . இப்படியாக, ஆரம்பகாலத்தில் தமிழ்த் தேசிய வழியில் பயணித்த ராமதாஸ், காலப்போக்கில் தனது நிலைப்பாட்டைத் தளர்த்தி மீண்டும் சாதிய அரசியலுக்குள்ளாகவே தன்னைச் சுருக்கிக்கொண்டார்.
கட்சி தொடங்கி சில மாதங்களே ஆன நிலையில் 1989-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், 33 இடங்களில் போட்டியிட்ட பாமக தோல்வி அடைந்ததாலும் தனித்து போட்டியிட்டு 6% வாக்குவங்கி 15 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது. 1991-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பண்ருட்டி ராமச்சந்திரன் பாமக சார்பில் பண்ருட்டி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்று முதல் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதேபோல 1996-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், திவாரி காங்கிரஸ் உடன் சேர்ந்து தேர்தலை சந்தித்த பாமக 116 இடங்களில் போட்டியிட்டு, 4 இடங்களில் வென்றது. 1998-ம் ஆண்டு, மத்தியில் இருந்த தேவகவுடா ஆட்சி கவிழ்க்கப்பட்டு, நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக – பாஜகவுடன் கூட்டணியில் அங்கம் வகித்த பாமக போட்டியிட்ட 5 இடங்களில் 4 இடங்களில் வென்று தலித் எழில்மலையை சுகாதாரத்துறை இணை அமைச்சராக்கியது.
1999-ஆம் ஆண்டு, மத்தியில் இருந்த பாஜக ஆட்சி ஜெயலலிதாவால் கவிழ்க்கப்பட்டு, நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக – பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த பாமக 8 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் வென்று என்.டி.சண்முகம் சுகாதாரத்துறை இணை அமைச்சராகவும், இ.பொன்னுசாமி பெட்ரோலியத்துறை அமைச்சராகவும், ஏ.கே.மூர்த்தி ரயில்வே துறை இணை அமைச்சராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதோபோல 2001-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், அதிமுக-வுடன் கூட்டணி அமைத்து 27 இடங்களில் போட்டியிட்ட 20 இடங்களில் வென்றது. இதில் பாமகவில் துடிப்புமிக்க இளைஞராக வலம் வந்த வேல்முருகன் பண்ருட்டித் தொகுதியிலும் காடுவெட்டி குரு ஆண்டிமடம் தொகுதியிலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
2004-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்த பாமக போட்டியிட்ட 6 இடங்களிலும் வென்று ஆர்.வேலு ரயில்வே துறை இணை அமைச்சராகவும், ராமதாஸின் மகன் அன்புமணி மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சுகாதாரத்துறை அமைச்சராகவும் பதவியேற்றுக்கொண்டனர். 2006-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து 34 இடங்களில் போட்டியிட்ட போட்டியிட்ட பாமக, 18 இடங்களில் வென்றது. இந்த தேர்தலிலும் மீண்டும் வேல்முருகன் பண்ருட்டித் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இப்படி ராமதாஸ் பாமக ஆரம்பித்த நாள் முதல் ஏறு முகமாகவே இருந்தது. 2011-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து 30 இடங்களில் போட்டியிட்ட 3 இடங்களில் மட்டுமே வென்றது. இந்த தேர்தலிலும் வேல்முருகன் தோல்வியை சந்திக்க காடுவெட்டி குரு ஜெயங்கொண்டம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் பாமகவின் போதாத காலம், தொடர்ச்சியாக இரண்டு முறை MLA-வாக இருந்த வேல்முருகனை பாமகவின் கட்டுப்பாட்டை மீறியதற்காக 2011 நவம்பர் 1 -ந் தேதி பாமகவில் இருந்து நீக்கப்பட்டார். 2014-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக-வுடன் கூட்டணி அமைத்து 8 இடங்களில் போட்டியிட்டு அன்புமணி ராமதாஸ் போட்டியிட்ட தருமபுரி தொகுதியில் மட்டும் வென்றது.
இதுவரை திமுக -அதிமுக கூட்டணிகளுடன் சவாரி செய்து வந்த பாமக 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், மாற்றம்… முன்னேற்றம்… அன்புமணி என தனது மகனை முதலமைச்சராக உட்கார வைத்து பார்க்கும் ஆசையில், ஊரையே கலக்கி போஸ்டர் ஒட்டி 234 தொகுதிகளிலும் பாமக தனித்துப் போட்டியிட்ட வாக்கு வேட்டையாடினார். ஆனால், கடைசியில் பல இடங்களில் கட்சி வேட்பாளர்கள், டெபாசிட் பறிபோனதுடன், அன்புமணியே தோல்வி அடைய அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது..
மேலும் பாமக வன்னியர் உள்ளிட்ட 108 சமுதாயங்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு மற்றும் அதில் வன்னியர் சமுதாயத்துக்கு 10.5% தனி உள் ஒதுக்கீடு போன்றவை வழங்கப்பட காரணமாக அமைந்தது; பசுமைத்தாயகம் அமைப்பை ஏற்படுத்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புகையிலை ஒழிப்பு போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவது; பூரண மது ஒழிப்புக்காகச் சட்டப் போராட்டம் நடத்தி மதுக்கடை திறந்திருக்கும் நேரத்தை குறைக்கவும், தேசிய மாநில நெடுஞ்சாலைகளிலுள்ள மதுக்கடைகளை மூடவும் வழிவகை செய்தது, தமிழர் உரிமை சார்ந்த போராட்டங்களுக்கு குரல் கொடுப்பது… போன்ற எண்ணெற்ற செயல்பாடுகளை ராமதாஸின் சாதனைகளாகப் பட்டியலில் அடங்கும்.
ஆரம்பகால ராமதாஸின் செயல்பாடுகள் அனைவராலும் பாராட்டப்படுபவையாக இருந்தாலும் தருமபுரி, மரக்காணம், பொன்பரப்பி போன்ற சாதிக் கலவரங்கள், ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி மாறுவது, தனது மகன் அன்புமணியை மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகவும் பாமக இளைஞரணித் தலைவராகவும் ஆக்கி கட்சி ஆரம்பித்த புதிதில் செய்த சத்தியத்தை மீறி வாரிசு அரசியல் செய்து காலப்போக்கில் இவரும் சாதாரண அரசியல்வாதியாக மாறிவிட்டார்.
இதுமட்டுமின்றி, பாமகவுக்காக தங்களது உழைப்பை கொடுத்த முன்னாள் மத்திய அமைச்சர் வேலு, ஏகே மூர்த்தி, காடுவெட்டி குரு, தீரன் போன்றவர்களை ஓரங்ககட்டிவிட்டு, தனது மகன் அன்புமணியை முன்னிலைப்படுத்தினார். மேலும் மாற்று சமுதாய சமநிலையை கருத்தில் கொண்டு ஏழு அம்பேத்கர் சிலைகளை திறந்து வைத்தவர், அரியலூரில் இரட்டைக்குவளை முறையை ஒழித்தவர் வன்னிய குல சத்திரிய இளைஞர்களால் மாவீரன் குரு என்றழைக்கப்பட்டவர் நுரையீரல் தொற்று காரணமாக அவதிப்பட்ட நிலையில், 2018 மே 25 -ந் தேதி காலமானது பாமகவிற்கு பெரும் இடியாக மாறியது. இதன் விளைவாக 2021 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைத்து 23 தொகுதிகளில் போட்டியிட்ட 5 இடங்களில் வென்றது.
தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, மாற்றத்தை கொண்டுவருவோம் என தமிழகத்தில் உதயமான பாமகவின் செயல்பாடுகள் பொதுமக்களிடம் எடுபடவில்லை. மேலும் பாமக தலைவராக வந்த அன்புமணி தனது மனைவியையும் கட்சிக்குள் கொண்டு வந்து, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வைத்து அவரும் தோல்வியை சந்தித்தார்.
நாளடைவில் பாமக குடும்ப கட்சியாக மாறிய நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இருவரும் கட்சியை வளர்ப்பதில் ஆர்வம் காட்டாமல், அரசியல் பேரத்திலேயே குறியாக இருந்து வந்தனர். அது ஒரு கட்டத்தில், அன்புமணி தானே அனைத்திலும் தலையிட்டு, தந்தையின் அனுமதி மற்றும் ஆலோசனையை கேட்காமல், தானே களத்தில் இறங்கி, பேரத்தை முடிவு செய்வது, தந்தை மகனுக்கு இடையே நீருபூத்த நெருப்பாக இருந்து வந்தது.
பாட்டாளி சொந்தங்களே என்றால் பூரிப்பு ஏற்படுகிறது. 2026 தேர்தலுக்குப் பிறகு அன்புமணிக்குத் தலைவர் பதவியை தருகிறேன் என சொன்னதற்கு 99 சதவீத பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த 1 சதவீதம் அன்புமணியின் குடும்பத்திற்காக விட்டுவிடுகிறேன்.
தருமபுரி, சேலம் போகும்போது மைக் வைத்து பேசக்கூடாது. 200 பேருக்கு மேல் கூட கூடாது . என்னை பார்க்க வேண்டும் என்றால் நான் தங்கி இருக்கும் உணவு விடுதிகளுக்கு வந்து தான் பார்க்க வேண்டும் என்று சொல்லலாமா? யார் ஆரம்பித்த கட்சி இது; தனி ஒரு மனிதனாக 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று இரவு பகலாக, நான் பட்ட பாடு சொல்லி மாலாது. அவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறேன்; கட்சிக்காக உழைத்திருக்கிறேன்.
வன்னியர் சமுதாய மக்களுக்காக மட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள 324 சமுதாயங்க சமுதாயங்களுக்கும் நான் பாடுபட்டு வருகிறேன். என்னுடைய முகநூலில், ட்விட்டரில் தொடர்ந்து எல்லா சமுதாயத்திற்கும் பொருந்துகிற மாதிரியான அறிக்கைகளை வெளியிடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இது போன்று யாரும் தமிழகத்தில் கொடுத்திருக்க மாட்டார்கள்.
அன்புமணியின் செயல்பாடுகள் மாநாட்டிற்கு பிறகு மிகவும் மோசமாகிவிட்டது. அன்புமணியே இங்கு வரும்போது எல்லாம் சொல்லுவார்; அவரிடம் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நான் இருக்கப் போகிறேன் என்று கூறினால், “நீங்கள் நூறு ஆண்டுகளுக்கு நன்றாக இருப்பீர்கள்” என்று அவர் வாயால் கூறுவார். அப்படி கூறியவர் தற்போது மார்பிலும் முதுகிலும் ஈட்டியால் கூட்டிக் கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட வேதனையை அனுபவிக்கிறேன்.
தூக்க மாத்திரையை போட்டால் கூட தூக்கம் வருவதில்லை. அன்புமணியை நினைக்கும் போதெல்லாம் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. ஆனால் அவரை நினைக்காமலும் இருக்க முடியவில்லை; ஆனால் அது பாசத்திற்காக அல்ல; அது எல்லாம் போய்விட்டது.
ராமாயணத்தில் தசரத சக்கரவர்த்தி ராமருக்கு ஆணையிடுவார்; 14 வருடம் வனவாசம் செல்ல வேண்டும் என்று சொல்லும்போது ராமருடைய முகம் அன்று பூத்த தாமரை மலர் போல் பிரகாசமாக இருந்ததாக கம்பன் வர்ணித்திருக்கிறார். நான் என்ன அன்புமணியை 14 ஆண்டுகள் வனவாசத்திற்கா செல்லச் சொல்கிறேன். செயல் தலைவராக இருக்க வேண்டும் என்று தான் சொல்கிறேன்.
அனைத்து பத்திரிகையாளர்களையும் அழைத்து ஐயா என்னை, செயல் தலைவராக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். செயல் தலைவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் கட்சியின் அடிமட்ட தொண்டனாக இருந்து ஐயா இடுகின்ற கட்டளையை செய்வேன் என்று சொன்னால் எப்படி இருக்கும்., என் மனம் எப்படி குளிர்ந்திருக்கும்.
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று சொன்னால், அதெல்லாம் பொய் என்று அன்புமணி கூறுகிறார். இப்போது போய் நீங்கள் கேட்டால் கூட நான் செயல் தலைவராக இருப்பேன்; ஐயா சொல்வது எல்லாம் கேட்பேன்; என்று சொல்லுவாரே தவிர, நடப்பதெல்லாம் வேறாக இருக்கும்.
தசரத மன்னன் ஸ்ரீராமன் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதை உலகில் நிலைநாட்டுவதே அவதாரத்தின் முக்கிய நோக்கமாம். இல்லையென்றால், ஒரு தவறும் செய்யாதிருந்தும், 14 ஆண்டுகள் பூழி வெங்கானம் (காடு) நடந்திருப்பானா ?! மேலும், தாடகை வதத்தின் பொருட்டு ஸ்ரீராமனையும், இலக்குவனையும் ஸ்ரீவிஸ்வாமித்ர முனிவர் அழைத்துச் செல்கிறார். அவர்கள் மிதிலா தேசத்தை அடைந்தபோது, சீதைக்கு சுயம்வர ஏற்பாடுகளை ஜனகர் மாமன்னர் மும்முரமாகச் செய்துகொண்டு இருக்கிறார்.
பெரிய சபையில் சிவ தனுசு வைக்கப்பட்டிருக்க, அதை நாணேற்றி முறிப்பவருக்கே தன்னுடைய மகள் சீதையை கொடுக்க இருப்பதாக ஜனகர் மாமன்னர் அறிவிக்கிறா. சிலர் முயற்சி செய்து தோற்ற பிறகு, வில்லை நன்கு பார்த்துவிட்டு வரும்படி ஸ்ரீராமனிடம் ஸ்ரீவிஸ்வாமித்ர முனிவர் சொல்கிறார். முனிவன் சொன்னதற்கான உட்கருத்தை அறிந்த ஸ்ரீராமன், நாணேற்றி சிவதனுசை முறிக்கவும் செய்தான். மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த சீதை, மண மாலையோடு ஸ்ரீராமனை நெருங்குகிறாள்.
அப்போது, ஸ்ரீராமன் வில்லைப் பார் என்றார் விஸ்வாமித்திரர்… நான் பார்த்தேன்… அவ்வளவுதான். மற்றபடி இந்த கல்யாணமெல்லாம் என் தகப்பனார் வந்து தீர்மானிக்க வேண்டிய விஷயங்கள். அப்பா வரட்டும் பார்த்துக் கொள்ளலாம். சீதையை மணக்கும் காலத்திலும் தசரதனது முடிவையே ஸ்ரீராமன் எதிர்நோக்கி இருந்தான் என்றால், ஸ்ரீராமன் தன் தந்தையின் மீது எவ்வளவு மரியாதை கொண்டு இருந்தான் என்பதை நாம் உணரலாம்.
இவற்றுக்கெல்லாம் மேல், ராவண வதம் முடித்து, புஷ்பக விமானத்தில் அமர்ந்து அயோத்தியை நெருங்கும்போது, தனது தந்தையின் ராஜ்ஜிய பூமி வந்துவிட்டது என்றே சீதையிடம் ஸ்ரீராமன் கூறுகிறார். தன்னுடைய ஊர் என்று சொல்லிக் கொள்ளவில்லை ஸ்ரீராமன் அது புராணம்.
ஆனால், இந்த கலியுகத்தில் 16 வயசுல இளைஞர் அமைப்பை உருவாக்கி 18 வயசுல எங்க அப்பாவுக்கு நாலு புள்ள இருக்கு நான் இல்லனா கவலைப்பட மாட்டார் என தமிழுக்காக மைக் புடிச்சு, மிசா சட்டம் வந்த உடனே கருணாநிதியை தான் கைது பண்ண போறாங்க என்று நினைக்கும் போது ஸ்டாலின் எங்க என கல்யாணம் ஆன 5 மாசத்துல உள்ள போனவரு. தன்னுடைய 53 -வது வயசுல தான் அமைச்சர் ஆகுறாரு. தன்னுடைய 63 -வது வயசுல தான் எதிர்கட்சி தலைவர் ஆகுறாரு.
“அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம். தந்தையிடன் நீ அறிவை வாங்கலாம்” என்ற கவிஞர் கண்ணதாசன் வரிகளை போல கருணாநிதியை தலைவரே என்று அழைத்த ஸ்டாலின் 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் கொளத்தூர், எழும்பூர் உள்பட 6 தொகுதிகளுக்கு நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலகத்தில் நடந்து முடிந்து கருணாநிதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி, அனைவரும் எதிர்பார்க்கும் ஒரே கேள்வி, தி.மு.க. – தே.மு.தி.க. கூட்டணி முடிவாகிவிட்டதா? பழம் கனிந்து கொண்டிருக்கிறது; பாலில் எப்போது விழும் என்று இன்னும் முடிவாகவில்லை.
தே.மு.தி.க கூட்டணி இழுபறிக்கு என்ன காரணம்? இழுபறி எதுவும் கிடையாது. அதற்கு மேல் இப்போது எதுவும் சொல்வதற்கு இல்லை. தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சேரும் என்று நம்புகிறீர்களா? நம்பிக்கை நிச்சயமாக இருக்கிறது என கருணாநிதி சொல்ல தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று வாழ்ந்த உத்தம தலைவர் ஸ்டாலின் தன்னுடைய 65 -வது வயசுல திமுக தலைவர், முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்கள் 2018 ஆகஸ்ட் 7-ந் தேதி தனது 94-வது வயதில் மறைவிற்கு பின்னர் தான் திமுக தலைவர் ஆகுறாரு. இப்படி புராணத்தில் வரும் தசரத மகன் ராமனை நினைவு கூறும் ராமதாஸ் இந்த கலியுகத்தில் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என வாழும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை ஏன் ராமதாஸ் மறந்தீர்.