சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் ஜெயின் என்ற முதியவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மாஞ்சா நூல் பட்டு காயம் ஏற்பட்ட விவகாரத்தில் ஒரு பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். சில ஆண்டுகளுக்கு முன்புவரை வடசென்னையில் காற்றாடித் திருவிழா நடைபெறும். அதில், காற்றாடி வைத்து, டீல் விடுவார்கள். ஒருசிலநேரம் மாஞ்சாவை பலமாகச் சேர்த்தாலும், அது அறுபடத்தான் செய்யும். அப்போது காற்றாடி மட்டும்தான் அறுபடுமே தவிர அந்த நூலுக்கு ஏதும் ஆகாது. காற்றாடியில் இருந்து அந்த நூல் அறுந்து, காற்றில் பறந்து கீழே வரும்போதுதான் சாலையில் இருச்சக்கர வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு இத்தகைய விபத்து ஏற்படுகிறது.
மாஞ்சா கயிறு கழுத்தை இழுக்கும்போது, கழுத்து அறுபடுகிறது. கழுத்துப் பகுதியின் மேலிருக்கும் சருமம் முதலில் அறுபடும். அடுத்து , சருமத்தின் அடியில் உள்ள ஃபேஷியா என்கிற லேயர், பின்னர் தசைப்பகுதி, அதைத் தொடர்ந்து ட்ரெக்கியா எனப்படும் மூச்சுக்குழாய் ஆகியவை அறுபடும். மூச்சுக்குழாய் அறுபடும் போது மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இது தொண்டைக்குழி வரை கிழிப்பதால், சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு நேரிடுகிறது. பாதிக்கப்பட்டவர் ஒருவேளை மீட்கப்பட்டாலும் மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்குள் மரணம் ஏற்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தாலும்கூட, அவர்களைக் காப்பாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு.
இத்தகைய எதிர்பாராத மரணத்தை ஏற்படுத்தும் மாஞ்சா நூலானது, தயாரிக்க சாதாரண கண்ணாடித் துண்டுகளுடன் சவ்வரிசி அல்லது வஜ்ரம் கலவையில், கலந்து பட்டத்தின் நூலில் தோய்த்து மாஞ்சா நூலை தயாரிக்கின்றனர்.காற்றாடி விடும்போது, அது எதிலும் மோதி அறுபடாமல் இருக்கத்தான் இப்படிச் செய்கிறார்கள். இப்படி பட்டம் பறக்கவிடப் பயன்படும் மாஞ்சா நூலால், இதுவரை பல விபத்துகள் நடைபெற்று உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன.
இத்தனை தொடர்ந்து, தனிநபர்கள் மற்றும் ‘பீட்டா’ விலங்குகள் நல அமைப்புகள் உள்ளிட்டவை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழங்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில், மாஞ்சா நூலில் கண்ணாடி துகள்கள், உலேகத் தகடுகள், ரசாயனக் கலவைகள் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு ஆண்டும் மனிதர்கள், விலங்கினங்கள் மற்றும் பறவைகள் என உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஆகையால், இதனை தடை செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவரான நீதிபதி ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு இந்த வழக்கில், , நமது நாட்டில் பட்டம் பறக்கவிடுவது பாரம்பரியமாக விஷயமாக உள்ளது. ஆனால், பட்டம் பறக்கவிடுவதற்காக மாஞ்சா நூல் பயன்படுத்தப்படுவதால், மனிதர்கள் மற்றும் பறவைகள், விலங்குகளின் உயிருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், விபத்துகள் ஏற்பட்டு, உயிர்பலி ஏற்படுவதும் அதிகரித்து வருகின்றன. எனவே, சுற்றுசூழலை கருத்தில் கொண்டு பசுமை தீர்ப்பாயம் இதில் தலையிடுவது அவசியமாகிறது.
எனவே, நைலானில் தயாரிக்கப்படும் மாஞ்சா நூல் மற்றும் இதர செயற்கை பொருட்களில் மாஞ்சா நூல், கண்ணாடித்தூள் சேர்த்து தயாரிக்கப்படும் பருத்தி நூல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது. இது போன்ற ஆபத்தான மாஞ்சா நூல்களை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ, இருப்பு வைத்திருக்கவோ தடை விதிக்கப்படுகிறது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த பிரகாஷ் ஜெயின் இவர் மாதவரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் கடந்த ஆறு வருடங்களாக வேலை செய்து வருகிறார். கடந்த 22 -ந் தேதி வேலை முடித்து தனது இரு சக்கர வாகனத்தில் மாதவரம் பகுதியில் இருந்து மூலக்கடை மேம்பாலம் வழியாக தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மாஞ்சா நூல் அவரது முகத்தில் பட்டு முகத்தில் பலத்த காயம் அடைந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இத்தனை தொடர்ந்து, பிரகாஷ் ஜெயின் அளித்த புகாரின் பேரில் கொடுங்கையூர் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மூலக்கடை பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த நஸ்ருதீன், கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் பாபு அதே பகுதியைச் சேர்ந்த அஸ்மா என்ற பெண் உட்பட மூன்று பேரை கைது செய்தனர்.
இதில் ரமேஷ் பாபு மற்றும் அவரது மகன்கள் இணையவழியில் பட்டம் வாங்கி விற்பனை செய்து வருவதும் அஸ்மா என்பவர் ஆந்திராவிலிருந்து பட்டம் மற்றும் மாஞ்சா நூல்களை வாங்கி வந்து கொடுங்கையூர் பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. மேலும் இவர்களிடமிருந்து 20 காற்றாடிகள், மாஞ்சா நூல் ஆறு கட்டு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் ஜோசப் தியாகராஜன் உள்ளிட்ட சிலரை காவல்துறையினர் தேடி வரும் நிலையில், கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.