தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறை சேர்ந்த காந்தி ராஜன் திருநெல்வேலி மாநகர காவல் துறையில் சந்திப்பு போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளராக காந்தி ராஜன் பணியாற்றி வருகிறார். திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகேயுள்ள சுத்தமல்லியில் குடும்பத்துடன் வசித்து வரும் காந்தி ராஜனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தினமும் காந்தி ராஜன் தனது சொந்த காரில் பணிக்கு வந்து செல்வது வழக்கம்.
நேற்று இரவு வழக்கம்போல காந்தி ராஜன் பணி முடிந்து நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோடு வழியாக சுத்தமல்லிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் உள்ள ஒரு தியேட்டர் அருகே முன்னால் சென்ற பேருந்து ஒன்று திடீர் என நிறுத்தப்பட்டது. இதனால் அந்த பேருந்தின் பின்னால் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த டவுன் செண்பகம் பிள்ளை தெருவை சேர்ந்த டவுன் செண்பகம் பிள்ளை தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி அசோக் குமார் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தினார். அந்த நேரத்தில் அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த காந்தி ராஜனின் கார் அந்த வாலிபரின் இருசக்கர வாகனத்தின் பின்புறமாக லேசாக மோதியது.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் இருசக்கர வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு காரில் இருந்தவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து சாலையில் கிடந்த தனது இருசக்கர வாகனத்தை ஓரமாக எடுத்துச் சென்று நிறுத்தி விட்டு காரை வழிமறித்து நின்று வாக்குவாதம் செய்துள்ளார். உடனே காரில் இருந்து இறங்கிய சிறப்பு உதவி ஆய்வாளராக காந்தி ராஜன் பதிலுக்கு வாக்குவாதம் செய்துள்ளார்.

ஒரு கட்டத்தில் காந்திராஜன் காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டுள்ளார். அப்போது அந்த வாலிபர் காரின் முன்பு நின்று கொண்டிருந்த வாலிபர் என் மீது காரை ஏற்றுங்கள் என போதையில் அடாவடி செய்ய ஆரம்பித்தார். இதனால் ஆத்திரமடைந்த காந்தி ராஜன் ஏற்றுவது போல முயற்சி செய்தார். ஆனால், அந்த வாலிபர் காரின் முன் பக்க பேனட்டில் ஏறி அமர்ந்து கொண்டு காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்… என்று கத்தி கூச்சலிட்டுள்ளார். இந்த சம்பவத்தை அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த மக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். வைரலாக பரவிய அந்த வீடியோ பொதுமக்களிடையே பேசுபொருளாக மாறியது.
இதனிடையே அந்த வீடியோவை அடிப்படையாகக் கொண்டு சம்பந்தப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் காந்தி ராஜனை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்தபோது அந்த வாலிபரும், சிறப்பு உதவி ஆய்வாளரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. புகாருக்கு உள்ளான காந்திராஜன் காவல் நிலைய பணியில் இருந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக அவருக்கு போக்குவரத்து பிரிவில் பணி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தினமும் அவர் காரில் பணிக்கு சென்று வந்த நிலையில் தற்போது மதுபோதையில் வந்து ஒழுங்கீனமான செயலில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் புகாருக்குள்ளான சிறப்பு உதவி ஆய்வாளர் காந்தி ராஜன் ஓய்வு பெறுவதற்கு இன்னும் 6 மாதங்களே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.