குப்பை அள்ளும் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்யக்கூடாது. குப்பை அள்ளுபவர்கள் ‘குப்பையை அள்ளுபவர்களே அள்ளட்டும்’ என்ற நிலை வரக்கூடாது. குப்பை அள்ளும் பணியில் இருந்து அவர்களை மீட்க வேண்டும் என்பதே நம்முடைய கோரிக்கை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனின் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும், தமிழர் எழுச்சி நாளாக அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். சென்னை காமராஜர் அரங்கில் நேற்றிரவு திருமாவளவனின் 63-வது பிறந்த நாள் இந்த நிகழ்ச்சி தொடங்கி இன்று அதிகாலை வரை நடைபெற்றது. இந்த விழா மேடைக்கு வந்த தொல் திருமாவளவனுக்கு சிறுமி பூ கொடுத்து வரவேற்றார். அவரது வாழ்க்கை வரலாறு குறித்து, AI தொழில்நுட்பத் தில் உருவாக்கப்பட்ட ஆவணப்படமும் வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இயக்குநர் கே.பாக்யராஜ், கவிஞர் விவேகா, ஆண்டாள் பிரியதர்ஷினி, இளைய கம்பன், தஞ்சை இனியன், அருண் பாரதி, லாவரதன், புனிதஜோதி ஆகியோர் பங்கேற்ற மதச்சார்பின்மை காப்போம் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. பின்னர் மதச்சார்பின்மை காப்போம் தலைப்பிலேயே ஊடக அரங்கமும் நடைபெற்றது. இதையடுத்து, இரவு நடை பெற்ற வாழ்த்தரங்கில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் MP., தமிழ்நாடு பாடநூல் ச் நிறுவனத் தலைவர் ஐ.லியோனி, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி வே.வனிதா, திரைப்பட இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில்,. “தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் திமுக அரசை எதிர்த்து போராடவில்லை என நம்மை விமர்சித்து இருக்கிறார்கள். ஆனால் நான் போராட்ட களத்திற்கு சென்று, தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வரை சந்தித்து அவருடைய கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தேன். 13 நாட்களும் அமைச்சர்களுடனும், போராட்டக்காரர்களுடனும் நான் பேசிக்கொண்டு இருந்தேன். இந்த விஷயத்தில் போராட்டக்காரர்களின் கோரிக்களை ஆதரிக்கிற அதே நேரத்தில், குப்பை அள்ளும் தொழிலை நிரந்தரப்படுத்தி, காலம் முழுவதும் நீங்கள் அதையே செய்துக்கொண்டு இருங்கள் என்று சொல்வது நியாயம் அல்ல.

குப்பை அள்ளும் பணியில் இருந்து அவர்களை மீட்க வேண்டும் என்பதே நம்முடைய கோரிக்கை. ஆனால் அவர்களுக்கான பணி நிரந்தரம் என்பது, ‘குப்பையை அள்ளுபவர்களே அள்ளட்டும்’ என்கிற கருத்திற்கு வலு சேர்ப்பதாக இருக்கிறது. ஆக பணி நிரந்தரம் செய்யக்கூடாது என்பதுதான் சரியான கருத்து. அதிலிருந்து அவர்களை மீட்க வேண்டும் என்பதுதான் சமூகநீதி” என திருமாவளவன் பேசினார்.