சென்னையில் 61 வயது மூதாட்டி மீதான கூட்டு பாலியல் பலாத்காரம் மற்றும் சிறுவனுக்கு போலீஸ்காரர் ஒருவர் கொடுத்த பாலியல் துன்புறுத்தல் பற்றி தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ள நிலையில் அடுத்த 7 நாட்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வரும் மனநலம் பாதிக்கப்பட்ட 61 வயது மூதாட்டி. இவர் அடிக்கடி வீட்டைவிட்டு வெளியேறுவதும், பிறகு சில நாட்கள் கழித்து வீட்டு வருவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில், மூதாட்டி வேளச்சேரி பேருந்து நிலையம், மாநகராட்சி பூங்கா ஆகிய பகுதிகளில் சுற்றித் திரிந்துள்ளார். பின்னர் மாநகராட்சி பூங்கா அருகே அமர்ந்திருந்துள்ளார்.
இந்நிலையில் தான் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு அந்த மூதாட்டி வேளச்சேரி 100 அடி ரோட்டில் அதிகாலை 4 மணிக்கு நடந்து சென்றார். அப்போது அவரது காலில் காயம் இருந்தது. ரத்தம் வடிந்தது. இதை பார்த்தவர்கள் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தனர். ரோந்து பணியில் இருந்த காவல்துறையினர் விரைந்து வந்து மூதாட்டியை ஆம்புலன்ஸில் எழும்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மூதாட்டியிடம் விசாரணை நடத்தியபோது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது. அப்போது, உணவகங்களில் பணிபுரியும் பீகாரைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் அவ்வழியே சென்றுள்ளனர். மதுபோதையில் இருந்த இளைஞர்கள், மூதாட்டியை வன்கொடுமை செய்து தப்பி ஓடி உள்ளனர். இதில் காயமடைந்த மூதாட்டி அழுதபடி அங்கேயே இருந்துள்ளார். அப்போது அந்த வழியாகச் சென்றவர்கள், மூதாட்டி அழுவதைப் பார்த்து வேளச்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து, சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வுச் செய்தனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இதில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மதப், ஆதில் ஆகிய இரண்டு இளைஞர்களையும் காவல்துறையினர் அதிரடி கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அதேபோல் கன்னியாகுமரியை சேர்ந்த சிறுவன் தனது பெற்றோருடன், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார். கோடை விடுமுறை என்பதால் சிறுவனை விட்டுவிட்டு பெற்றோர் சொந்த ஊர் திரும்பியிருக்கின்றனர். இப்படி இருக்கையில், சிறுவனின் உறவினர், தனது நண்பரான 2013-ஆம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்த வடபழனி காவல் நிலைய தலைமைக் காவலர் வேலப்பனை இரண்டு நாட்களுக்கு முன்னர் வீட்டிற்கு அழைத்திருக்கிறார். இருவரும் வீட்டில் குடித்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் உறவினரும், சிறுவனும் தூங்கிவிடவே, வேலப்பன் தூங்கிக்கொண்டிருந்த சிறுவனை எழுப்பி வலுக்கட்டாயமாக வாயில் மது ஊற்றியிருக்கிறார்.
பின்னர் பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவன், வேலப்பனை டிவி ரிமோட்டால் தாக்கிவிட்டு, வீட்டை வெளியில் பூட்டிக்கொண்டு நடந்தே அசோக் நகர் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்திருக்கிறார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் தலைமைக் காவலர் வேலப்பனை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், சிறுவனுக்கு பாலியல் சீண்டல் கொடுக்கப்பட்டது உண்மை என தெரிய வந்தது.
இதுதொடர்பாக ஏட்டு வேலப்பன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். அதோடு அவரை கைது செய்தனர். அவரை பணி நீக்கம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இந்த 2 சம்பவங்களும் சென்னையை அதிர வைத்துள்ளன. இந்நிலையில் தான் 61 வயது மூதாட்டியின் கூட்டு பாலியல் பலாத்காரம் மற்றும் சிறுவனுக்கு தலைமைக் காவலர் கொடுத்த பாலியல் தொல்லை சம்பவங்கள் குறித்து தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. இதுதொடர்பாக விரிவான அறிக்கையை 7 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறை தலைவருக்குதேசிய மகளிர் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.