அந்தக் காலத்தில் அனைத்து பேருந்துகளிலும் “கரம், சிரம், புறம் நீட்டாதீர்கள்” என்பது தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பிற்காக இந்த வசனம் எழுதியிருக்கும். மேலும் கூடவே புகை பிடிக்காதீர்கள் என்ற வசனமும் எழுதப்பட்டிருக்கும். காலப்போக்கில் அந்த வசனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய் கொண்டே இருப்பதன் விளைவை இன்று நம் சமூதாயம் அனுபவித்து கொண்டுள்ளது. ஓடும் பேருந்தில் இருந்து எச்சில் உமிழ ஜன்னல் வழியாக முயன்ற கல்லூரி மாணவர் ஒருவரின் தலை துண்டாகி துடிதுடித்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் குந்துகோல் தாலுகா சிரூர் கிராமத்தை சேர்ந்த பக்கரேஷ். இவர் உப்பள்ளியில் உள்ள ஐடிஐ கல்லூரியில் படித்து வந்தார். தினமும் கல்லூரிக்கு பேருந்தில் சென்று வருவது வழக்கம். இந்நிலையில்தான் கல்லூரி முடிந்த பிறகு பக்கரேஷ் உப்பள்ளியில் இருந்து கேஎஸ்ஆர்டிசி அரசு பேருந்தில் ஏறினார். அவர் லட்சுமேஷ்வர் நோக்கி சென்று கொண்டிருந்தார். லட்சுமேஷ்வர் பிரதான சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தது.
பக்கரேஷ் பஸ்சின் ஜன்னல் அருகே உள்ள சீட்டில் அமர்ந்திருந்தார். அப்போது அவர் எச்சில் உமிழ்வதற்காக பஸ் ஜன்னல் வழியாக தலையை வெளியே நீட்டினார். அப்போது பேருந்தின் பின்புறம் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த லாரி பேருந்தை முந்தி செல்ல முயன்றது. வேகமாக லாரி முந்த முயன்றபோது பக்கரேஷ் தனது தலையை பேருந்து ஜன்னல் வழியாக வெளியே நீட்டினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் லாரியை நிறுத்த முயன்றார். ஆனால் லாரியை உடனடியாக நிறுத்த முடியவில்லை.
இதனால் லாரி பக்கரேஷின் தலையில் மோதியது. இதில் அவரது தலை துண்டாகி கீழே விழுந்தது. ஜன்னலில் அவரது உடல் தொங்க தலையின்றி ரத்தம் சொட்ட சொட்ட பக்கரேஷ் துடிதுடித்து இறந்தார். இதை பார்த்த பயணிகள் அலறினர். பக்கரேஷின் தலை ரோட்டில் கிடக்க அவரது உடல் மட்டும் பேருந்து ஜன்னலில் தொங்கியபடி இருக்கையில் கிடந்த சம்பவம் காண்போரை ஒரு கணம் உறைய வைத்தது. பக்கரேஷின் கோர மரணம் “கரம், சிரம், புறம் நீட்டாதீர்கள்” என்று பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பிற்காக எழுதப்பட்ட வசனம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துகிறது.