“சிங்கார சென்னை” என்று சொல்லும் திராவிட அரசு, தேங்கியிருக்கும் நீராலும், தூர்வாரப்படாத கால்வாய்களாலும் சின்னாபின்னமாக இருக்கின்றது. இந்தச் சிறிய மழையிலேயே “சிங்கார சென்னை” பலி வாங்க ஆரம்பித்து விட்டது வேதனை அளிக்கிறது என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், சென்னை கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளரான வரலட்சுமி, இன்று அதிகாலை வேலைக்கு செல்லும்போது மழை நீரில் உள்ள கேபிள் மீது காலை வைத்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, மின்சாரம் தாக்கி உயிரிழந்த வரலட்சுமியின் கணவர் ரவி உடல்நலம் குன்றியவர் மேலும் வரலட்சுமிக்கு 12 வயதில் ஒரு பெண் குழந்தையும் 10 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளார்கள். வீட்டில் சம்பாதிக்கும் ஒரே நபர் வரலட்சுமி தான். தாயை இழந்த குழந்தைகள் ‘எங்க அம்மா எங்களை விட்டுட்டு போய்ட்டாங்க…’ என்று சொல்லி கதறுவது கண்போரை கண்கலங்க செய்துள்ளது.
இதுகுறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூய்மை பணியாளர் வரலட்சுமிக்கு ஒரு மகள், ஒரு மகன் என 2 குழந்தைகள் உள்ளனர். வரலட்சுமியின் இறப்பை தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு மின்வாரியம் சார்பில் ரூ.10 லட்சம், தனியார் தூய்மைப்பணி ஒப்பந்த நிறுவனம் சார்பில் ரூ.10 லட்சம் என ரூ.20 லட்சம் நிதி ரூ.20 லட்சம் நிவாரணம் பலியான தூய்மை பணியாளர் வரலட்சுமியின் குடும்பத்தினரை சந்தித்து ரூ.20 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார்.

மேலும், பலியான வரலட்சுமி பணியாற்றிய தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் அவரது கணவருக்கும் பணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் வரலட்சுமியின் கணவர் ரவி உடல்நலம் குன்றியிருப்பதால் அவருக்கான முழு மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி வரலட்சுமியின் 2 குழந்தைகளின் கல்விச் செலவை திமுக ஏற்கும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதனிடையே, கண்ணகி நகர் 11வது குறுக்கு தெருவில் மின்சார கேபிள்கள் சாலை கீழ் செல்வதாகவும் அபாயகரமாக உள்ளதாகவும் அங்கு இருக்கும் மக்கள் பலமுறை மின்சார வாரியத்திற்கு புகார் அளித்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில், இன்று தென் சென்னை கண்ணகி நகரில் காலை துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர் சகோதரி வரலட்சுமி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தச் சென்றிருந்தேன். தாயை இழந்து பரிதவித்துக் கொண்டிருக்கும் இரண்டு குழந்தைகளை பார்க்கும் பொழுது மனது வலித்தது. தனது துணைவியை இழந்து வாடும், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் அவரது கணவர் நிலைகுலைந்து நிற்கிறார். பரிதவித்து அழுது கொண்டிருக்கும் சுற்றத்தாரையும் சகப்பணியாளர்களையும் பார்க்கும் பொழுது மிகவும் வேதனையாக இருந்தது.
இது தடுக்கப்பட்டிருக்க வேண்டிய மரணம். ஏற்கனவே இரண்டு மூன்று நாட்களாக செப்பனிடப்படாத மின் கம்பியைப் பற்றி அந்தப் பகுதி மக்கள் புகார் அளித்திருந்தும் அதை சரி செய்யாததினால், நேற்று பெய்த மழையினால் நீர் தேங்கி அந்த மின் கம்பி தெரியாமல் போனது. அதில் கால் வைத்த உடனேயே வரலட்சுமி உயிரிழந்தார். அவர் உயிர் தியாகம் செய்ததாகவே சொல்ல வேண்டும், ஏனெனில் அதிக மக்கள் நடமாடும் அந்த இடத்தில் விடியற்காலம் அவர் இழந்த உயிர் பல பேரின் உயிர்களை காப்பாற்றியுள்ளது.

நான் தமிழக அரசிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன்: தூய்மை பணியாளர்கள் பணி செய்யும் பொழுது அவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். மழையில் பணி செய்யும்போது முழுமையான பூட்ஸ், குப்பைகளை அகற்றும்போது கையுறைகள், நோய் தொற்றாமல் இருக்க முகக் கவசங்கள் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக “சிங்கார சென்னை” என்று சொன்னாலும், தேங்கியிருக்கும் நீராலும், தூர்வாரப்படாத கால்வாய்களாலும் சின்னாபின்னமாக இருக்கும் இந்த சென்னை, இந்தச் சிறிய மழையிலேயே பலி வாங்க ஆரம்பித்து விட்டது. அப்படியானால் வெள்ளம் வந்தால் எத்தனை பேர் பலியாகப் போகிறார்கள் என்று நினைக்கவே பயமாக உள்ளது.
மழைநீர் வடிகால்களையும் சாலைகளையும் செவ்வனே செப்பனிட அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் அன்றாட பிரச்சனைகளை கவனிக்காமல், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு “மாநில உரிமை காப்போம்” என்ற பிரச்சாரம் மட்டுமே செய்யும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முதலில் “மாநில மக்களின் உயிர்களை” காப்பாற்ற வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.