மனிதக் கழிவை மனிதனே அள்ளுவதற்குத் தடைவிதித்துச் சட்டமியற்றி, பத்தாண்டுகளுக்கு மேலாகியும் ஏன் இன்றுவரை அதனை நடைமுறைப்படுத்தவில்லை? சமூக நீதி எனும் சொல்லாடலைக் கூச்சமின்றி, மூச்சுக்கு முந்நூறு தடவை உச்சரிக்கும் மாண்புமிகு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களே! இதுதான் நீங்கள் சமூக நீதியைக் கட்டிக் காக்கிற இலட்சணமா? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், சென்னை கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளரான வரலட்சுமி, இன்று அதிகாலை வேலைக்கு செல்லும்போது மழை நீரில் உள்ள கேபிள் மீது காலை வைத்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, மின்சாரம் தாக்கி உயிரிழந்த வரலட்சுமியின் கணவர் ரவி உடல்நலம் குன்றியவர் மேலும் வரலட்சுமிக்கு 12 வயதில் ஒரு பெண் குழந்தையும் 10 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளார்கள். வீட்டில் சம்பாதிக்கும் ஒரே நபர் வரலட்சுமி தான். தாயை இழந்த குழந்தைகள் ‘எங்க அம்மா எங்களை விட்டுட்டு போய்ட்டாங்க…’ என்று சொல்லி கதறுவது கண்போரை கண்கலங்க செய்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூய்மை பணியாளர் வரலட்சுமிக்கு ஒரு மகள், ஒரு மகன் என 2 குழந்தைகள் உள்ளனர். வரலட்சுமியின் இறப்பை தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு மின்வாரியம் சார்பில் ரூ.10 லட்சம், தனியார் தூய்மைப்பணி ஒப்பந்த நிறுவனம் சார்பில் ரூ.10 லட்சம் என ரூ.20 லட்சம் நிதி ரூ.20 லட்சம் நிவாரணம் பலியான தூய்மை பணியாளர் வரலட்சுமியின் குடும்பத்தினரை சந்தித்து ரூ.20 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார்.
மேலும், பலியான வரலட்சுமி பணியாற்றிய தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் அவரது கணவருக்கும் பணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் வரலட்சுமியின் கணவர் ரவி உடல்நலம் குன்றியிருப்பதால் அவருக்கான முழு மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி வரலட்சுமியின் 2 குழந்தைகளின் கல்விச் செலவை திமுக ஏற்கும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதனிடையே, கண்ணகி நகர் 11வது குறுக்கு தெருவில் மின்சார கேபிள்கள் சாலை கீழ் செல்வதாகவும் அபாயகரமாக உள்ளதாகவும் அங்கு இருக்கும் மக்கள் பலமுறை மின்சார வாரியத்திற்கு புகார் அளித்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் சீமான் தனது எக்ஸ் பக்கத்தில்,” சென்னை, கண்ணகி நகர் அருகே தூய்மைப்பணியாளர் தங்கை வரலட்சுமி அவர்கள் தூய்மைப்பணிகளை மேற்கொள்ளும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயருமடைந்தேன். தங்கையை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். தங்கை வரலட்சுமி அவர்களுக்குக் காலணி வழங்கப்படாததன் விளைவாகவே தூய்மைப்பணி செய்யும்போது மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்திருக்கிறாரெனும் செய்தி பெரும் மனவலியைத் தருகிறது.
தூய்மைப்பணியாளர்களுக்கு 35 வகை பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்கப்பட வேண்டுமென நீதிமன்றம் கூறியிருக்கும் நிலையில், மிகவும் அடிப்படையான காலணியும், கையுறையுமே வழங்கப்படாத இழிநிலை நிர்வாகச் சீர்கேட்டின் உச்சமாகும். சமூகத்தின் விளிம்பு நிலையிலிருக்கும் எளிய மக்களான தூய்மைப்பணியாளர்களைப் பணிப்பாதுகாப்பும், உயிர்ப்பாதுகாப்பும் இல்லாத ஒரு கொடுஞ்சூழலில், பணிக்கு அமர்த்துவதும், தனியார்மயப்படுத்தி அவர்களது உழைப்பைச் சுரண்டுவதுமான ஆளும் திமுக அரசின் போக்குகள் கடும் கண்டனத்திற்குரியது.
செயற்கை நுண்ணறிவு உலகை ஆட்டிப் படைக்கும் 21-ஆம் நூற்றாண்டிலும் மனிதக் கழிவை மனிதனே அள்ளும் அவல நிலை தொடர்வதும், அதில் சாதியின் அடிப்படையில் உழைக்கும் ஆதித்தொல்குடி மக்களே ஈடுபடுத்தப்படுவதும் வெட்கக்கேடானது இல்லையா? இதுதான் குலத்தொழிலுக்கு எதிரான திமுக அரசின் முற்போக்குச்செயல்படா? மலக்குழி மரணங்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதலிடம் வகிக்கிறது என வெளிவரும் புள்ளிவிவரங்கள் ஒட்டுமொத்த மாநிலத்துக்குமான அவமானம் இல்லையா?

சமூகத்தைத் துப்புரவுசெய்து தூய்மைப்படுத்தும் தூய்மைப்பணியாளர்கள் மீது அடக்குமுறையைப் பாய்ச்சி, தனியார்மயத்தைத் திணிக்கும் திராவிட மாடல் அரசு, தங்கை வரலட்சுமியின் மரணத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறது? ஏழை, எளிய மக்களின் உயிர்கள் அரசின் அலட்சியத்தால் பறிபோகும்போதெல்லாம் சில இலட்சங்களை வீசியெறிந்து மக்களின் வாயை மொத்தமாக மூடிவிடலாமென எண்ணுகிறதா? நீதிமன்றத்தின் உத்தரவெனக் கூறி, தூய்மைப்பணியாளர்களின் போராட்டத்தைக் கலைத்து, ஒடுக்குமுறையை ஏவிய ஆட்சியாளர் பெருமக்களே, தூய்மைப்பணியாளர்களுக்குச் செய்து கொடுக்கப்பட வேண்டிய அடிப்படை உரிமைகள் என நீதிமன்றம் கூறியது மட்டும் ஏன் உங்கள் செவிகளில் விழவில்லை?
மனிதக் கழிவை மனிதனே அள்ளுவதற்குத் தடைவிதித்துச் சட்டமியற்றி, பத்தாண்டுகளுக்கு மேலாகியும் ஏன் இன்றுவரை அதனை நடைமுறைப்படுத்தவில்லை? சமூக நீதி எனும் சொல்லாடலைக் கூச்சமின்றி, மூச்சுக்கு முந்நூறு தடவை உச்சரிக்கும் மாண்புமிகு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களே! இதுதான் நீங்கள் சமூக நீதியைக் கட்டிக் காக்கிற இலட்சணமா? விளிம்பு நிலை மக்களுக்காக ஆட்சி நடத்தும் அழகா? பேரவலம்! ஆகவே, தூய்மைப்பணியில் ஈடுபடும்போதே இறந்துபோன தங்கை வரலட்சுமி அவர்களின் மரணத்துக்கான துயர்துடைப்பு நிதியாக 1 கோடி ரூபாய் வழங்க வேண்டுமெனவும், அவர்களது குழந்தைகளின் கல்விச்செலவை அரசே முழுமையாக ஏற்பதோடு, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும் ஆளும் திமுக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.” என சீமான் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.