கடந்த 2015 -ஆம் ஆண்டு ஜனவரி 9 -ந் தேதிக்கு முன்னதாக இந்தியாவிற்கு வந்திருந்த ஈழத்தமிழர்களை, சட்டப்படி இந்தியாவில் தங்குவதற்கு மத்திய அரசு அனுமதியளிப்பதற்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொடர் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி என தி. வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து, வேல்முருகன் தனது எக்ஸ் பக்கத்தில், 2015 ஆம் ஆண்டு ஜனவரி 9 -ந் தேதிக்கு முன்னதாக இந்தியாவிற்கு வந்திருந்த ஈழத்தமிழர்களை, சட்டப்படி இந்தியாவில் தங்குவதற்கு அனுமதி அளித்திருக்கும் ஒன்றிய அரசின் முடிவு, எங்கள் தொப்புள் கொடி உறவுகளுக்கு பெரும் ஆறுதல் அளிக்கும் வரலாற்றுச் செய்தி. இதற்காக, தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கும், தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும், நேர்மையுடன் உதவிய மூத்த அதிகாரிகளுக்கும், நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனாலும், இதுவே போதுமான தீர்வல்ல. இனிமேலும் ஈழத்திலிருந்து வருபவர்களை, “சட்டவிரோதக் குடியேறிகள்” அல்லது “விசா காலம் முடிந்தவர்கள்” என்ற அடிப்படையில் அணுகாமல், தமிழ்நாடு மக்களின் உயிர்ப்பிணைப்பான தொப்புள் கொடி உறவுகளாகவே, ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் அணுக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், இன்று புழல் சிறை மற்றும் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்கள் குற்றவாளிகள் அல்ல. அவர்கள் எங்கள் இன உறவுகள். இந்த அறிவிப்பின் பயனை அவர்களுக்கு கிடைக்கச் செய்ய, அவர்களை உடனடியாக விடுதலை செய்து, குடும்பத்தோடு வாழும் வழி செய்ய வேண்டும். அதோடு, அவர்கள் விரும்பித் தேர்ந்தெடுக்கும் நாடுகளுக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளையும், அவர்கள் இங்கேயே வாழ விரும்பும் பட்சத்தில், அவர்களுக்குக் குடியுரிமையையும், தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் இணைந்து செய்து தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஈழத் தமிழர்களுக்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியது, பொதுவாக்கெடுப்பு கோரிக்கையை முன்வைத்தது. செம்மணி மனிதப் புதைகுழிகள் குறித்தான தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தியது போன்ற, பல்வேறு போராட்ட வடிவங்கள் , சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொண்டர்களும், தலைவர்களும் தொடர்ந்து எழுப்பிய கோரிக்கைகளின் பயனாகவே, இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது என்பதில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மகிழ்ச்சி கொள்கிறது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காகவும், உலகளவில் தமிழர்களின் உரிமைக்காகவும் குரல் கொடுத்து வந்ததினால் கிடைத்த இந்த வெற்றியை, அனைத்து விதமானப் போராட்டங்களிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியோடு துணை நின்று போராடிய, இயக்கங்களுக்கும், அமைப்புகளுக்கும், அதன் ஆளுமைகளுக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உறவுகளுக்கும், உலகெங்கிலும் பரவி வாழும் 12 கோடித் தமிழர்களுக்கும் கையளிக்கிறோம் என வேல்முருகன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.