தமிழகத்தில் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் வீடுகளுக்கே சென்று நியாய விலைக் கடை பொருட்கள் வழங்க ஜூலை 1-ந் தேதி முதல் சோதனை ரீதியாக தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் சுமார் 2.25 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் நியாய விலைக் கடைகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த பொருட்கள் மாதந்தோறும் நியாய விலைக் கடைகள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குடும்ப அட்டையில் பெயர் உள்ள குடும்ப உறுப்பினர்கள் சென்று பயோமெட்ரிக்கில் தங்களின் கைரேகையை பதிவு செய்து பொருட்கள் வாங்கி வருகின்றனர். இதில் மூத்த குடிமக்கள், நடக்க இயலாத மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விலக்கு அளிக்கப்பட்டு தங்களின் சார்பில் வேறு ஒருவரை வைத்து நியாய விலைக் கடைபொருட்களை வாங்கி கொள்ள முடியும்.
இந்நிலையில், தமிழகத்தில் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று நியாய விலைக் கடை பொருட்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில், தமிழகத்தில் நியாய விலைக் கடை பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் வீடுகளில் நேரடியாக நியாய விலைக் கடை பொருட்களை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சோதனை ஜூலை 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
முதற்கட்டமாக இந்த சோதனைக்கு 10 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி சென்னை, ராணிப்பேட்டை, கடலூர், ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, நீலகிரி, நாகப்பட்டினம், திருநெல்வேலி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனை நடைபெற உள்ளது. முதற்கட்டமாக, 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு நியாய விலைக் கடை பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கூட்டுறவு, உணவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனை முயற்சியை தொடர்ந்து மாநிலம் முழுவதும் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது.
அதன்படி வரும் சுதந்திர தினம் அல்லது செப்டம்பர் மாதத்தில் மாநிலம் முழுவதும் உள்ள மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு, நியாய விலைக் கடை பொருட்கள் நேரடியாக வினியோகம் செய்யப்பட உள்ளது. அதன்படி மாதந்தோறும் முதல் வாரத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே நியாய விலைக் கடை பொருட்கள் சென்று விடும். இதனால் அவர்கள் நியாய விலைக் கடைக்கு அலைய வேண்டிய தேவை இருக்காது.