தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், டாஸ்மாக் கடைகளில் குவாட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாயும், ஆப் பாட்டிலுக்கு 20 ரூபாயும், புல் பாட்டிலுக்கு 40 ரூபாயும் கூடுதலாக வாங்குவதாக புகார்கள் எழுந்த வண்ணமே உள்ளது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடிமகன்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகிறார்கள். புகாருக்கு உள்ளாகும் மற்றும் குடிமகன்களின் செல்போன் கேமராக்களில் சிக்குவோர் மட்டும் சஸ்பெண்ட் செய்யப்படுவதும் தொடர்கிறது.
ஆனால் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வாங்கும் நடைமுறையில் இன்று வரை எதுவும் மாறவில்லை. ஏனெனில் பெரும்பாலான குடிமகன்கள் கூடுதல் கட்டணத்தை எதிர்த்து கேள்வி கேட்பதும் இல்லை.. அப்படி கேள்வி கேட்போருக்கு மட்டும் சில கடைகளில் கூடுதல் கட்டணம் திரும்ப தரப்படுவதாக குடிமகன்கள் கூறுகிறார்கள்.
இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் வழங்கப்படும் மதுபாட்டில்களை ஸ்மார்ட் போன் மூலம் ஸ்கேன் செய்தால், அந்த பாட்டில் எங்கே வாங்கப்பட்டது, எந்த தேதியில் வாங்கப்பட்டது, இது எந்த பேட்ச்சை சேர்ந்தது, மதுபான ஆலையில் இருந்து எப்போது வெளியே கொண்டு வரப்பட்டது போன்ற பல்வேறு விவரங்களை அறியும் பில் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தும் பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வாங்குவதாக புகார்கள் தொடர்ந்து கொண்டே உள்ளது.

இந்நிலையில், தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் வழியாக கள்ளம்புளி சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை எண்:10876-ல் பத்திரிக்கையாளர் ஒருவர் விற்பனையாளரிடம் சரக்குக்கு ரூபாய் 200 பெற்றுக் கொண்டு முதலில் 180 ரூபாய் கொடுத்துள்ளார். ஏன் இவ்வளவு எடுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு மறுபடி பத்து ரூபாய் கொடுத்தார்.
பத்திரிக்கையாளர் பாட்டிலில் பில்லை பார்த்த பிறகு 160 ரூபாய் எம்ஆர்பி இருக்கும்போது எதற்கு பத்து ரூபாய் எக்ஸ்ட்ரா வாங்குகிறீர்கள் என்று கேட்க, விற்பனையாளர் நாங்கள் என்ன நக்கவா போக முடியும் என்று கூறுகிறார். அதன்பின்னர் விற்பனையாளரிடம் நான் பத்திரிக்கையாளர் என்று கூறிய பிறகு பத்து ரூபாய் எடுத்து தூக்கி எறிகிறார்.