நாடு முழுவதும் முதலீடு என்ற பெயரில் டிஜிட்டல் அரஸ்ட், ஆன்லைன் முறைகேடுகள், வங்கி நிதி முறைகேடுகள் போன்றவற்றின் மூலம் 2025-ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவில் 3,203 கோடி, கர்நாடகாவில் 2,413 கோடி மற்றும் தமிழகத்தில் 1,897 கோடி உற்பட 19,812 கோடி ரூபாய் சைபர் கிரைம் மோசடி நடைபெற்றுள்ளது.
சமீபத்தில் 73 வயதான ஓய்வு பெற்ற நிதித்துறையை சேர்ந்த லக்னோவைச் சேர்ந்த அதிகாரி அமர்ஜித் சிங் என்பவரை சுமார் 25 நாட்கள் டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பெயரில் மிரட்டப்பட்டுள்ளார். மும்பை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அவர் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வீடியோ காலில், மோசடி கும்பல் தங்கள் விளையாட்டை ஆரம்பித்துள்ளனர். மிரட்டியதோடு மட்டுமல்ல, விசாரணைக்காக பணம் அனுப்பச் சொல்லி அவரை கட்டாயப்படுத்தி உள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்ட பயத்தில் இருந்த சிங், பதற்றத்தில் தனது பிக்சட் டெபாசிட்களை உடைத்தும், RTGS மற்றும் UPI மூலமாகவும் சுமார் 90 லட்சத்தை பல தவணைகளாக மாற்றியுள்ளார். தனிமைப்படுத்தப்பட்ட பயத்தில் இருந்த அமர்ஜித் சிங்கின் நடத்தையில் சந்தேகமடைந்து அவரின் மகன், சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்த பின்னரே, இந்த மோசடியானது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தற்போது இது குறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறை, ஒரு குறிப்பிட்ட தொகையை முடக்கியுள்ளதாக தெரிய வருகிறது.
அதாவது வீட்டிலேயே உங்களைச் சிறை வைத்து, உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்யும் ஒரு புதிய வகை மிரட்டல் தான் இந்த டிஜிட்டல் அரெஸ்ட். ஒருவரின் பயத்தை மூலதனமாக கொண்டு தான் சைபர் கிரைம் மோசடிகள் அரங்கேறி வருகின்றன. உங்கள் மொபைல் போன் வழியாகவே, உங்களை பயமுறுத்திப் பணம் பறிக்கும் இந்த மாயக் கும்பலிடம் இருந்து தப்பிக்க மிக முக்கியமான தற்காப்பு நடவடிக்கைகள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி டிஜிட்டல் அரெஸ்ட் என்ற ஒன்று கிடையவே கிடையாது. இது முற்றிலும் ஏமாற்று வேலை. காவல்துறை அல்லது எந்த ஒரு அமைப்பும் வீடியோ கால் அல்லது மெசேஜிங் ஆப் மூலம் யாரையும் கைது செய்யவோ அல்லது விசாரணை நடத்தவோ மாட்டார்கள். மேலும் வீடியோ காலில் அல்லது மற்ற அம்சங்கள் மூலம் உங்களுடைய தனிப்பட்ட ஆவணங்களையோ அல்லது ரகசிய ஆவணங்களையோ கேட்க மாட்டார்கள்.
பயத்திற்கோ, நெருக்கடிக்கோ அடிபணியாதீர்கள் மோசடியாளர்கள் எப்போதும் உங்களை நிதானமாக சிந்திக்க விடக்கூடாது என்பதற்காக, ஒரு பதற்றமான சூழலிலேயே வைத்திருப்பார்கள். இப்போதே பணத்தை கட்டுங்கள். இல்லையெனில் சிறைதான் என மிரட்டுவார்கள். அதுபோன்ற நேரங்களில் பயப்படாமல், அந்த இணைப்பை துண்டித்து விட்டு அதிகாரப்பூர்வ அமைப்புகளைத் தொடர்பு கொண்டு, பிரச்சனையை தெரிவியுங்கள்.
மேலும் அரசு ஒருபோதும் பணம் கேட்காது? பொதுவாக ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். காவல்துறையினரோ, நீதிமன்றமோ அல்லது எந்தவொரு அரசுத் துறையோ விசாரணை என்ற பெயரில் அல்லது சரிபார்ப்பு என்ற பெயரில் உங்களை வங்கிப் பரிமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தாது. அப்படி யாராவது உங்களிடம் பணம் கேட்டால் அது கட்டாயம் மோசடியாக தான் இருக்கும். ஆக அதுபோன்ற கோரிக்கையை நிராகரியுங்கள். அப்படியும் சந்தேகம் என்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி பிரச்சனையை கூறுங்கள். சுயமாகச் சரிபார்க்கவும் யாராவது உங்களை மிரட்டினால், உடனடியாக உள்ளூர் காவல் நிலையம் அல்லது உங்கள் வங்கி மேலாளர் அல்லது நீங்கள் நம்பும் குடும்ப உறுப்பினர்களிடத்தில் சொல்லுங்கள்.
எதற்காகவும் பதற்றமடையாமல் நிதானமாக இருங்கள். சந்தேகத்திற்கு உரிய அழைப்புகள் அல்லது மெசேஜ்கள் வந்தால் புகார் அளியுங்கள். தாமதிக்காமல் புகார் செய்யுங்கள் ஒருவேளை நீங்கள் மோசடியாளர்களால் பணத்தை ஏமாந்து விட்டால், ஒரு நிமிடம் கூட வீணாக்காதீர்கள். உடனே வங்கிக்கும், சைபர் கிரைம் ஹெல்ப்லைனுக்கும் தெரிவியுங்கள். எவ்வளவு விரைவில் புகார் அளிக்கிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் உங்கள் பணத்தை மீட்க முடியும். மோசடியாளர்களின் கணக்கை ஆரம்பத்திலேயே முடக்கி பணத்தை ஹோல்டு செய்து வைக்க முடியும்.
தவறு நடந்துவிட்டது என்று கத்தி கூச்சலிடாமல், உடனே பணத்தை மீட்பதற்காக வேலையில் இறங்குங்கள். பொதுமக்கள் இணையவழி பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ளும்போது, மிகுந்த கவனத்துடன், நம்பகத் தன்மையை உறுதி செய்த பின்னரே ஈடுபட வேண்டும் என்றும், ஏதேனும் சைபர் மோசடி நடந்தால் உடனடியாக 1930 என்ற அவசர எண்ணை அழைத்து புகார் தெரிவித்து உங்கள் பணத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்