தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தத்தில் + 2 மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற வந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், மாணவியின் மரணத்தை வைத்து அரசியல் செய்யாதீர்கள் எனவும் ஊர் மக்கள் ஆவேசமாகினர்.
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சுப்புராஜ். இவரது 17 வயது மகள் அரசு மேல் நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது 12-ஆம் வகுப்பு பொது தேர்வை அவர் எழுதி வந்தார். சம்பவத்தன்று மாலை 6 மணிக்கு அவர் வீட்டின் அருகே உள்ள காட்டு பகுதிக்கு சென்றுள்ளார். ஒரு மணி நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், அவரது தந்தை சுப்புராஜ் மற்றும் உறவினர்கள் காட்டுப் பகுதிக்கு சென்று தேடினர். பின்னர் குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர். அங்கிருந்த காவல்துறையினர் பள்ளி மாணவி என்பதால் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து சுப்புராஜ் உள்ளிட்டோர் அடுத்த நாள் காலை விளாத்திகுளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர். அங்கும் புகார் பெறப்படாததால், மீண்டும் குளத்தூர் காவல் நிலையம் வந்து, புகார் அளித்தனர். இதற்கிடையே, மாலை காட்டுப் பகுதியில் மாணவி முகத்தில் காயங்களுடன் இறந்துகிடப்பதாக தகவல் கிடைத்தது. குளத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மாணவியின் சடலத்தை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து ஆத்திரமடைந்த சுப்புராஜ் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் குறுக்குச்சாலை – ராமேசுவரம் சாலையில் வேடநத்தம் பேருந்து நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர். மாணவி சடலத்தை உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ஏன் கொண்டு செல்ல வேண்டும், அவரது மரணத்துக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், புகார் கொடுக்க சென்ற போது அலைக்கழித்த குளத்தூர் காவல் நிலையம் மற்றும் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.
தகவல் அறிந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன், துணைக் காவல் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன் சம்பவ இடத்துக்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆனாலும், இரவு முழுவதும் போராட்டம் தொடர்ந்ததால், பரபரப்பு நிலவியது. இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவின் பேரில் 6 -க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், மேலும், கூடுதலாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், குற்றவாளியை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் வரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம் எனவும், உடனடியாக குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் மற்றும் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் தூத்துக்குடி -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 4 நாட்களாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் மாணவியின் பெற்றோரை சந்தித்து அரசியல் கட்சியினர் ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அக்கட்சியின தேர்தல் மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்ஜுனா வருகை தந்து பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். 20 நிமிடங்களுக்கு மேலாக அவர்கள் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிக் கொண்டிருக்கும் பொழுது வெளியே கிராம மக்கள் யார் இவர்? எதற்காக இங்கே வந்துள்ளார்? நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொழுது எங்கே சென்றார்? மாணவியின் மரணத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என கிராம மக்கள் ஆவேசம் அடைந்தனர். மேலும் செய்தியாளர் சந்திப்பு நடத்த இருந்த பொழுது ஊர் மக்கள் கூச்சலிட்டதால் அவர் அங்கிருந்து தனது ஆதரவாளர்களுடன் கிளம்பிச் சென்றார்.